தேடுதல்

Vatican News
இத்தாலிய பத்திரிகையாளர்களுடன் திருத்தந்தை இத்தாலிய பத்திரிகையாளர்களுடன் திருத்தந்தை 

சிறு முதலீட்டாளர்களின் துயர்நிலை அதிகரித்துள்ளது

குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிடும் குறும்பத்திரிகைகள் இன்றையச் சூழலில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிடும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குறைந்த முதலீட்டில் பத்திரிகைகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், விற்பனைசெய்யும் தெருவோர விற்பனையாளர்களும், இன்றைய கொள்ளை நோய் சூழலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தெருவோர பத்திரிகைகளை விற்பவர்கள், ஏற்கனவே இந்த கோவிட்-19 கொள்ளை நோயால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இவ்வேளையில், தங்கள் வேலைகளையும் இழந்துவருவது, மேலும் துன்பங்களைத் தருவதாக உள்ளது என சிறு பத்திரிகைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் கடைநிலையில் இருக்கும் இந்த மக்கள் இந்த சிறு ஊதியம் கிடைக்கும் வேலை வழியாக வாழ்வை ஓரளவு ஓட்டிக்கொண்டிருந்த வேளையில், தற்போது அந்த வேலையையும் இழந்து துயரத்தில் இருப்பது வேதனை தருகிறது என அதில் கூறியுள்ளார்.

சிறு பத்திரிகைகள் வழியாக வாழ்வு நடத்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இத்தாலியில் இத்தகைய மக்களிடையே காரித்தாஸ் கத்தோலிக்க அமைப்பு ஆற்றிவரும் சிறப்புப் பணிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரிய நிறுவனங்கள் வழியாக அல்லாமல், குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் பத்திரிகைகளை அச்சிட்டு  வெளியிடும் குறும்பத்திரிகைகள், இன்றைய சூழலில், பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிடும் திருத்தந்தையின் இந்த கடிதம், உலகின் சிறு பத்திரிகைகள் அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

27 April 2020, 13:55