தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

"பேதுருவின் காசு" நிதி திரட்டப்படும் நாள் தள்ளிவைப்பு

புனித பேதுரு, பவுல் ஆகியோரின் திருநாளன்று, "பேதுருவின் காசு" என்ற பெயரில் திரட்டப்படும் நிதியானது, இவ்வாண்டு, அக்டோபர் 4ம் தேதி திரட்டப்படும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் ஆகியோரின் திருநாள் சிறப்பிக்கப்படும் வேளையில், "பேதுருவின் காசு" (Peter’s Pence) என்ற பெயரில் திரட்டப்படும் நிதியானது, இவ்வாண்டு, அக்டோபர் 4, பொதுக்காலத்தின் 27ம் ஞாயிறன்று திரட்டப்படும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகெங்கும் நிலவும் நலம் குறித்த நெருக்கடியையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், அக்டோபர் 4ம் தேதி, ஞாயிறு என்பதாலும், அது, அசிசி நகர் புனித பிரான்சிஸ் திருநாள் என்பதாலும், அந்த நாள் 2020ம் ஆண்டுக்கென தெரிவு செய்யப்பட்டது என்றும், வத்திக்கான் செய்தித்துறை தலைவர், மத்தேயோ புரூனி அவர்கள் கூறினார்.

'பேதுருவின் காசு' – வரலாற்றுப் பதிவுகள்

திருஅவை வரலாற்றில் துவக்கத்திலிருந்தே இறைமக்களிடையே பழக்கத்தில் இருந்த 'பேதுருவின் காசு' என்ற நிதி திரட்டும் முயற்சி, 7ம் நூற்றாண்டில், ஆங்கிலோ-சாக்ஸன் மக்களின் மனமாற்றத்திற்குப் பின், தெளிவான வழிமுறைகளுடன் திரட்டப்பட்ட நிதியாக மாறியது.

இரண்டாவது வத்திக்கான் பொதுச் சங்கத்தில், இந்த நிதி திரட்டும் முறைகளைக் குறித்து, ஆயர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துக்களைத் தொகுத்து, புனிதத் திருத்தந்தை, 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு வெளியிட்ட "Gaudium et Spes" என்ற திருத்தூதுச் சட்டத் தொகுப்பில், இந்நிதி குறித்த வரைமுறைகளையும் இணைத்தார்.

துன்பங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக...

ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 29ம் தேதி, திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் திருநாளன்றோ, அல்லது, அதையொட்டி வரும் ஞாயிறன்றோ கத்தோலிக்க உலகெங்கும் திரட்டப்படும் இந்த நிதி, போர், கொள்ளை நோய், இயற்கைப் பேரிடர் என்று பல்வேறு துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வண்ணம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு டுவிட்டர் செய்திகள்

மேலும், இவ்வியாழனன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் அவர் முன்வைத்த கருத்தையும், மறையுரையில் பகிர்ந்துகொண்ட ஓர் எண்ணத்தையும் இரு டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டுள்ளார்.

"கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக, இறந்தோருக்காக, குறிப்பாக, எவ்வித பெயரும், முகவரியும் இன்றி இறந்தோருக்காக இணைந்து செபிப்போம்" என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

"நமது சாட்சியம் மற்றவர்களுக்கு பாதையைத் திறக்கிறது. நமது செபம் தந்தையின் இதயத்திற்கு கதவைத் திறக்கிறது. சாட்சிய வாழ்வும் செபமும் நிறைந்த வாழ்வுக்காக இறையருளை வேண்டுவோம், அதுவே மக்களை இயேசுவிடம் ஈர்த்து வரும்" என்ற மறையுரைக் கருத்தை இரண்டாவது டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவு செய்திருந்தார்.

30 April 2020, 14:48