தேடுதல்

திருத்தந்தை முதலாம் ஜான் பால் திருத்தந்தை முதலாம் ஜான் பால் 

முதலாம் ஜான் பால் குறித்த ஆய்வுகளுக்கு புதிய அறக்கட்டளை

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் விட்டுச் சென்ற கலாச்சார, மற்றும், ஆன்மீக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல உதவும் புதிய அறக்கட்டளை ஒன்று வத்திக்கானில் துவக்கம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் மிகக் குறுகிய காலமே திருத்தந்தையாக பணியாற்றிய திருத்தந்தை முதலாம் ஜான் பால் குறித்த ஆய்வுகளுக்கும், அவரின் கருத்துக்களை மக்கள் நடுவே கொண்டுசெல்லவும் உதவும் நோக்கத்தில் திருத்தந்தை முதலாம் ஜான் பால் அறக்கட்டளை ஒன்றை துவக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 28 வரை திருத்தந்தையாக பணியாற்றி இறைபதம் சேர்ந்த திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்களின் எண்ணங்கள், எழுத்துக்கள், மற்றும் அவரின் வாழ்வு எடுத்துக்காட்டுக்கள் அனைவரையும் சென்றடைய உதவும்  வகையில் இந்த அமைப்பு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை அதிகாரிகளுடன் பேசசுவார்த்தை நடத்தி, திருஅவை விதிகளுக்கு ஏற்ப, 'திருத்தந்தை முதலாம் ஜான் பால் வத்திக்கான் அறக்கட்டளை' என்பதை உருவாக்க எடுத்த தீர்மானம் குறித்து அதே மாதம் 17ம் தேதி, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அறிவித்து, அது, முழுநிலையில் துவக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமறைச் சட்டம், மற்றும், சமூக நீதித்துறையைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் திருப்பீடச் செயலகத்திலிருந்து இந்த அறக்கட்டளை பணியாற்றும் என, இச்செவ்வாய்க்கிழமையன்று திருப்பீடத்தால் வெளியிடப்பட்டுள்ள இச்செய்தி உரைக்கிறது.

இந்த அறக்கட்டளையின் தலைவராக திருப்பீடச்செயலர், கர்தினால் பரோலின் அவர்கள் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் விட்டுச் சென்ற கலாச்சார, மற்றும், ஆன்மீக பாரம்பரியத்தை கட்டிக்காத்தல், அவர் குறித்த கருத்தரங்குகள், ஆய்வுகள் போன்றவைகளை ஊக்குவித்தல், அவர் குறித்த ஆய்வுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விருதுகள் போன்றவைகளை உருவாக்குதல், இத்திருத்தந்தை குறித்த ஆய்வுகளை ஆராய்ந்து திருத்துதல், ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கு அதற்கு தேவையானவைகளை வழங்குதல் போன்றவைகளை தன் நோக்கமாக கொண்டுள்ளது வத்திக்கானின் இந்த திருத்தந்தை முதலாம் ஜான் பால் வத்திக்கான் அறக்கட்டளை. 

28 April 2020, 14:18