தேடுதல்

புதன் மறைக்கல்வியுரையின்போது - 290420 புதன் மறைக்கல்வியுரையின்போது - 290420 

மறைக்கல்வியுரை : நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர்

கிறிஸ்துவுக்காக வாழும்போது, உலகின் அடக்குமுறைகளுக்கு நாம் உள்ளாக்கப்படலாம். ஆனால், இந்த சித்ரவதைகள் எல்லாம், விண்ணுலகில் நம் மகிழ்வுக்கு காரணமாக அமைகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை பல வாரங்களாக வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்புக் காலத்தின் இந்த புதனன்று, இயேசுவின் மலைப்பொழிவில் வரும் இறுதிப்பேறு குறித்து எடுத்துரைத்தார்.  இயேசுவுக்காக கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் துன்பங்களே, விண்ணுலக மகிழ்வுக்குரிய திறவுகோல் என்ற கருத்தை மையம் கொண்டதாக திருத்தந்தையின் இப்புதன் மறைகல்வியுரை இருந்தது.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பேறுபெற்றோர் குறித்த நம் புதன் மறைக்கல்வித்தொடரை, 'நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், விண்ணுலகு அவர்களுக்கு உரிமையாகும்' (மத்.5:10) என்ற இறுதி பேற்றுடன் இன்று நிறைவுச் செய்வோம். இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் அனைத்தையும் கடைப்பிடிக்க முயலும்போது, அதாவது, கிறிஸ்துவுக்காக வாழும்போது, உலகின் அடக்குமுறைகளுக்கு நாம் உள்ளாக்கப்படலாம். ஆனால், இந்த சித்ரவதைகள் எல்லாம், விண்ணுலகில் நம் மகிழ்வுக்கு காரணமாக அமைகின்றன. இயேசு உரைத்த பேறுகளின் பாதை என்பது, நம் சுயநலன்களிலிருந்து விலகி, தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் வாழ்வை நோக்கிய உயிர்ப்பின் பாதையாகும். உலகப் பொருட்களோடு உடன்பாடு கொள்வதிலிருந்து நமக்கு விடுதலையளிக்கவல்லவை, இவ்வுலகின் சித்ரவதைகள் என்பதை, திருஅவை புனிதர்கள் நமக்கு காட்டிச் சென்றுள்ளனர். இன்றும் நம் சகோதரர், சகோதரிகளுள் பலர் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். நாமும் அவர்களுடன் நம் நெருக்கத்தை, அருகாமையை தெரிவித்து வருகிறோம். நாமும் இவ்வுலகின் உப்பாக செயல்படுவோம், இல்லையெனில், நற்செய்தியின் சாரத்தை நாமும் இழப்பதோடு, பிறருக்கும் இடறலாக இருப்போம்.  நாம் எத்தனை துன்ப துயர்களை அனுபவித்தாலும், இறைவனின் அருளின் உதவியுடன் ஈர்க்கப்பட்டு, இயேசுவைப்போல் மாற உதவப்படுகிறோம். கிறிஸ்து நம்மை புதிய வாழ்வு நோக்கி வழிநடத்திச் செல்கிறார். இவ்வாறு, நாம் இயேசு மலைப்பொழிவில் வழங்கிய பேறுகளின் தாழ்ச்சியுடன்கூடிய பாதையைப் பின்பற்றிச் செல்லும்போது, இறையரசின் அனுபவத்தை நாம் பெறுவோம். இது நம் மிக உயரிய மகிழ்வும் நற்பேறுமாகும் என, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2020, 13:40