தேடுதல்

Vatican News
மனாவுசில் கோவிட்-19 இறப்புகள் மனாவுசில் கோவிட்-19 இறப்புகள் 

மனாவுஸ் மக்களுடன் திருத்தந்தையின் அருகாமை

மனாவுஸ் நகரில், குறிப்பாக, அமேசான் நிலப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இத்தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து, திருத்தந்தை, மனாவுஸ் பேராயரை, தொலைபேசியில் தொடர்பு கொண்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டின் அமேசான் பகுதியில் உள்ள மனாவுஸ் (Manaus) உயர் மறைமாவட்டத்தின் பேராயர் லியோனார்தோ ஸ்டெயினர் (Leonardo Steiner) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

மனாவுஸ் நகரில் இத்தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டோர், குறிப்பாக, அமேசான் நிலப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இத்தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து, திருத்தந்தை, பேராயரைத் தொடர்பு கொண்டார் என்று அந்த உயர் மறைமாவட்டச் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று திருத்தந்தை தொலைப்பேசியில் பேசியவேளையில், மனாவுஸ் மறைமாவட்ட மக்களோடு உள்ளத்தில் ஒன்றித்து, அவர்களுக்காக செபித்து வருவதாகக் கூறியது மனதுக்கு ஆறுதலாக இருந்ததென்று பேராயர் ஸ்டெயினர் அவர்கள் கூறினார்.

மேலும், கடந்த சனிக்கிழமையிலிருந்து பெய்து வரும் மழையால், அப்பகுதியில் தொற்றுக்கிருமியின் ஆபத்து கூடியுள்ளது என்பதை தான் திருத்தந்தையிடம் தெரிவித்ததாகவும், அவர், தன்னுடைய வேண்டுதல்களில் அதை மனதில் கொள்வதாகவும் கூறியது, அமேசான் பகுதி மக்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தியது என்றும் பேராயர் ஸ்டெயினர் எடுத்துரைத்தார்.

இதுவரை, மனாவுஸ் பகுதியில் 3,600 பேர் இந்த தொற்றுக்கிருமியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 300 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

29 April 2020, 14:46