தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை வெளியிடும் @pontifex பக்கம் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை வெளியிடும் @pontifex பக்கம் 

ஆண்டவர் நம்மை, தன்னோடு உரையாட அழைக்கிறார்

பிறரன்புச் செயல்கள், இறைவேண்டல், நோன்பு ஆகியவற்றை, பாசாங்கு, இரட்டைவேடம், வெளிவேடம் ஆகியவை இன்றி ஆற்றுமாறு ஆண்டவர் சொல்கிறார்

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 10, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையின் ஒரு கருத்தை, #HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன், தன் முதல் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

பாவிகளாகிய நாம் எல்லாரையும், தன்னோடு உரையாட ஆண்டவர் இன்று அழைக்கிறார், அஞ்சாதீர்கள், உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும், அவை, உறைந்த பனிபோல வெண்மையாகும் (எசா.1:18) என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாயன்று நிறைவேற்றிய திருப்பலியை, மக்கள் நேரடி ஒளிபரப்பில் காண்பதற்கு உதவும்வண்ணம், https://www.youtube.com/watch?v=JJYLnATN7lw என்ற ‘யூ டியூப்’ முகவரியையும், தன் டுவிட்டர் செய்தியோடு வெளியிட்டுள்ளார்.  

#Lent என்ற ஹாஷ்டாக்குடன், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தி, இச்செவ்வாய் பிற்பகலில் வெளியானது.

பிறரன்புச் செயல்கள், இறைவேண்டல், நோன்பு ஆகியவற்றை மட்டும் நாம் ஆற்றவேண்டும் என்று ஆண்டவர் நம்மிடம் சொல்லவில்லை, அதோடு, இவற்றை, பாசாங்கு, இரட்டைவேடம், வெளிவேடம் ஆகியவை இன்றி ஆற்றுமாறும் அவர் சொல்கிறார் என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மார்ச் 09, இத்திங்களன்று, வெளியிடப்பட்ட திருத்தந்தையின் நான்காவது டுவிட்டர் செய்தியில், நாம் எல்லாரும் சேர்ந்து இறைவேண்டல் செய்வோம், இந்நாள்களில் ஒவ்வொரு நாளும் உரோம் நேரம் காலை 7 மணிக்கு சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றும் திருப்பலியை,  https://www.youtube.com/watch?v=ojGaZWm93WU என்ற ‘யூ டியூப்’ முகவரியில் நீங்கள் பின்பற்றலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இத்தாலியில் பரவிவரும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தையொட்டி, மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நோக்கில் திருத்தந்தையின் மூவேளை செப உரைகளையும், புதன் மறைக்கல்வி உரைகளையும் தன் நூலகத்திலிருந்து வழங்கி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

10 March 2020, 15:47