தேடுதல்

Vatican News
ஐவரி கோஸ்ட் நாட்டின் புதிய தூதர் நம்பிக்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கிறார் ஐவரி கோஸ்ட் நாட்டின் புதிய தூதர் நம்பிக்கைச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கிறார்  (Vatican Media)

மார்ச் 21, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

திருப்பீடத்திற்கு, ஐவரி கோஸ்ட் நாட்டின் புதிய தூதர் Louis Léon Boguy Bony அவர்கள், மார்ச் 21, இச்சனிக்கிழமை காலையில் திருத்தந்தையை சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 21, இச்சனிக்கிழமை காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மற்றும், மறையுரையை மையப்படுத்தி, இரு டுவிட்டர் செய்திகளையும், தவக்காலம் பற்றி ஒரு டுவிட்டர் செய்தியையும், ஹாஷ்டாக்குகளுடன் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

#PreghiamoInsieme என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாகிய திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், “வீடுகளிலேயே தங்கவேண்டிய சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்களை இன்று நினைவுகூர்வோம், குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்றாக வெளிப்படுத்துவது, துன்பம் நிறைந்த இந்த நேரத்தை, குடும்பத்தில் எல்லாரும் எவ்வாறு சேர்ந்து வாழ்வதென்பது போன்ற வழிகளை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. இந்நெருக்கடிவேளையில் குடும்பங்களில் அமைதியும், படைப்பாற்றல் திறனும் வளர்வதாக” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன. 

#HomilySantaMarta என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாகிய திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “ஆண்டவர் நம் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கிறார், ஆயினும், அவற்றை நாம் அவரிடம் காட்டுவதற்கு, அவருக்கு நான் தேவைப்படுகிறேன், எவ்வாறு செபிப்பது, ஆண்டவர் பக்கம் எவ்வாறு ஈர்க்கப்படுவது என்பது பற்றி இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுக்கொடுக்கிறது” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

“நம் சொந்த புண்ணியங்களை விளம்பரப்படுத்தாமல், திறந்த இதயங்களுடன் தாழ்ச்சியுடன் ஆண்டவரிடம் செல்ல வேண்டும்” என்றும், தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இச்சனிக்கிழமை காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை யூடியூப்பில் காண்பதற்கு உதவியாக, அதன் முகவரியையும் https://www.youtube.com/watch?v=K_giBLSr7HU டுவிட்டர் செய்தியுடன் இணைத்து வெளியிட்டுள்ளார்.

#Lent என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாகிய திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியில், “துன்பம் மற்றும், மரணம் பற்றிய கேள்விக்கு, கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு மட்டுமே பதிலைக் காண முடியும் என்ற அறிவில் உறுதியாயிருந்து, வாழ்வின் அர்த்தம் பற்றி சிந்திப்பதற்கு, தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது, நாம் மரணத்திற்காக அல்ல, மாறாக, வாழ்வை அபரிவிதமாகப் பெற, நித்திய வாழ்வைப் பெற படைக்கப்பட்டுள்ளோம்” என்ற சொற்கள் வெளியாயின.

மார்ச் 22, ஞாயிறு

மேலும், இந்தியாவில், மார்ச் 22, இஞ்ஞாயிறன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய நாள் முழுவதும் ஆலயங்களிலும், துறவு சபை இல்லங்களிலும் தொடர் திருநற்கருணை ஆராதனை  வழிபாடுகள் நடைபெறவுள்ளன. உலகெங்கும் அனைத்து துறவு சபைகளும், இந்நாளை சிறப்பு செப நாளாக கடைப்பிடிக்கின்றன.

21 March 2020, 15:09