தேடுதல்

Vatican News
2019ல் இடம் பெற்ற ஆயர் மாமன்றக் கூட்டத்தில் திருத்தந்தை 2019ல் இடம் பெற்ற ஆயர் மாமன்றக் கூட்டத்தில் திருத்தந்தை  (AFP or licensors)

2022ம் ஆண்டில் 16வது உலக ஆயர்கள் மாமன்றம்

உரோம் ஆயராக, எனது பணியின் தொடக்கம் முதல், திருஅவையில் கூட்டுப்பண்பு உருவாக்கப்படுவதை ஊக்குவித்து வருகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தில், ஆண்டவரின் குரலுக்குச் செவிமடுக்கவும், அவரின் வார்த்தையோடு ஒன்றித்திருக்கவும் வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்திய வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.

“இந்த ஏற்ற காலத்தில், ஆண்டவரின் குரலுக்குச் செவிமடுப்போம். அவரின் வார்த்தையோடு நாம் எவ்வளவுக்கு முழுமையாய் ஒன்றித்திருக்கின்றோமோ அவ்வளவுக்கு, அவர் நமக்கு இலவசமாக வழங்கும் இரக்கத்தை அனுபவிப்போம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், #Lent என்ற ஹாஷ்டாக்குடன், மார்ச் 07, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

16வது உலக ஆயர்கள் மாமன்றம்

மேலும், 2022ம் ஆண்டு அக்டோபரில் நடைபெறும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "கூட்டுப்பண்புள்ள ஒரு திருஅவைக்காக: ஒன்றிப்பு, பங்கேற்றல் மற்றும், மறைப்பணி" என்ற தலைப்பைத் தெரிவுசெய்துள்ளார் என்று, உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலர், கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள், மார்ச் 07, இச்சனிக்கிழமையன்று அறிவித்துள்ளார்.

கூட்டுப்பண்பு: மூவாயிரமாம் ஆண்டில் திருஅவையின் பாதை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணியில், திருஅவையில் கூட்டுப்பண்பு என்ற தலைப்பு முக்கிய இடம்பெற்று வருகின்றது. புனித திருத்தந்தை ஆறாம் பவுல்  அவர்கள், உலக ஆயர்கள் மாமன்றத்தை உருவாக்கியதன் 50ம் ஆண்டு நிறைவில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் ஆயராக, எனது பணியின் தொடக்கம் முதல், திருஅவையில் கூட்டுப்பண்பு உருவாக்கப்படுவதை ஊக்குவித்து வருகிறேன் என்று கூறினார். 2015ம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை, திருஅவையில் கூட்டுப்பண்பு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மிக முக்கிய மரபுரிமைப்பண்புகளில் ஒன்று என்றும், இதுவே,  மூவாயிரமாம் ஆண்டில் கடவுள் திருஅவையிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்றும் கூறினார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் முடிவடையும் காலக்கட்டத்தில், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, APOSTOLICA SOLLICITUDO என்ற MOTU PROPRIO அறிக்கையின் வழியாக, உலக ஆயர்கள் மாமன்றத்தை உருவாக்கினார்.

ஒற்றுமையைப் பேணவும், திருத்தந்தைக்கு உதவவும்..

உலக ஆயர்கள் மாமன்றம் என்பது, உலகின் பல பகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆயர்கள் குழு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுகூடி, திருத்தந்தைக்கும், ஆயர்களுக்கும் இடையே நிலவும் நெருங்கிய ஒற்றுமையை வெளிப்படுத்தி அதனைக் கட்டிக்காக்க உதவும் அமைப்பாகும். மேலும், இம்மாமன்றத்தில் உலகில் திருஅவையின் செயல்பாடுகள் குறித்து எழும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, திருஅவையில் விசுவாச வளர்ச்சி போன்ற விவகாரங்களுக்கு, ஆயர்கள் திருத்தந்தைக்கு உதவுவார்கள்.

பொதுவாக உலக ஆயர்கள் மாமன்றம், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். திருத்தந்தையர் சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை தேவைப்பட்டபோது கூட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபரில் அமேசான் பற்றிய சிறப்பு உலக ஆயர்கள் மாமன்றத்தை நடத்தினார்.

07 March 2020, 15:09