தேடுதல்

Vatican News
மார்ச் 1 - ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மார்ச் 1 - ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

தீயோனுடன் உரையாடலை மேற்கொள்ளவேண்டாம்

உலக இன்பங்களே பெரிதென எண்ணும் மனப்போக்கை நம்மில் தீயோன் விதைத்தாலும், இறைவனின் உதவியின்றி நாம் எதையும் ஆற்றமுடியாது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தீயோனால் மும்முறை பாலைவனத்தில் இயேசு சோதிக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கற்களை அப்பமாக்கும்படியும், கோவிலின் மேலிருந்து குதித்து புதுமை ஆற்றும்படியும், தன்னை வணங்கி உலக அரசுகள் அனைத்தையும் பெறும்படியும், தீயோன் முன்வைத்த சோதனைகளுக்கு, மறைநூல் வார்த்தைகளாலேயே இயேசு பதிலளித்தது, நமக்குத் தரும் பாடம் என்னவென்றால், தீயோனுடன் உரையாடலை மேற்கொள்ளவேண்டாம் என்பதேயாகும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இங்கு இயேசுவின் அணுகுமுறையில் நாம் காண்பதெல்லாம், அவர் தீயோனை விரட்டுகிறார், அல்லது, இறைவார்த்தைகளால் பதிலளிக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம் மனச்சான்றையும் அமுக்கும் விதத்தில் நமக்கு, பல பரிந்துரைகளை முன்வைத்து, தீயோன் சோதிக்கிறார் என்றுரைத்தார்.

இறைவனை நோக்கிய பாதையிலிருந்து விலகிச் சென்று, உலக இன்பங்களே  பெரிதென எண்ணும் மனப்போக்கை நம்மில் தீயோன் விதைத்தாலும், காலப்போக்கில், பல பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, இறைவனின் உதவியின்றி, நாம் எதையும் ஆற்ற முடியாது என்பதை அனுபவ பூர்வமாக உணர்கிறோம் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

02 March 2020, 15:30