தேடுதல்

Vatican News
சீனக் கத்தோலிக்கரை மையப்படுத்தி, திருத்தந்தை வெளியிட்ட செபக் கருத்தைப் பற்றிய காணொளிச் செய்தி சீனக் கத்தோலிக்கரை மையப்படுத்தி, திருத்தந்தை வெளியிட்ட செபக் கருத்தைப் பற்றிய காணொளிச் செய்தி 

சீனாவிலுள்ள கத்தோலிக்கருக்காகச் செபம்

சீனாவில் உள்ள திருஅவை, நற்செய்திக்குரிய நம்பிக்கையைப் பாதுகாத்து, ஒற்றுமையில் வளர்ந்திட நாம் மன்றாடுவோம் – திருத்தந்தையின் செபக்கருத்து

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடாமல், நற்செய்தியைப் பரப்பும் உண்மையான கிறிஸ்தவர்களாகவும், நல்ல குடிமக்களாகவும் வாழுமாறு, சீனக் கத்தோலிக்கரை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2020ம் ஆண்டு மார்ச் மாத, தனது செபக் கருத்து பற்றி காணொளிச் செய்தியில் விவரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீனாவில் உள்ள திருஅவை, நற்செய்திக்குரிய நம்பிக்கையைப் பாதுகாத்து, ஒற்றுமையில் வளர்ந்திட நாம் அனைவரும் மன்றாடுவோம் என்று கூறியுள்ளார்.

இக்காலத்தில் சீனாவிலுள்ள திருஅவை, வருங்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகின்றது, திருஅவையும், சீனாவிலுள்ள கிறிஸ்தவர்கள், உண்மையான கிறிஸ்தவர்கள் மற்றும், நல்ல குடிமக்களாக வாழுமாறு விரும்புகின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

சீனாவிலுள்ள கிறிஸ்தவர்கள், மதமாற்ற நடவடிக்கையில் தங்களை ஈடுபடுத்தாமல், நற்செய்தியை ஊக்குவிக்க வேண்டும், மற்றும், பிளவுபட்டுள்ள கத்தோலிக்க சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்று, திருஅவை மேலும் விரும்புகின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

எனவே, சீனாவிலுள்ள திருஅவை, நற்செய்திக்கு விசுவாசமாய் இருப்பதைப் பாதுகாக்கவும், ஒற்றுமையில் வளரவும் வேண்டுமென்று நாம் எல்லாரும் இறைவனிடம் மன்றாடுவோம் என்று, திருத்தந்தை, அக்காணொளிச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். 

திருத்தந்தையின் கருத்துக்காகச் செபிக்கும் பழக்கம், 1844ம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டில், இயேசு சபையின் பயிற்சி இல்லத்தில் ஆரம்பமானது. பின்னர், 1890ம் ஆண்டில், இதனை, திருத்தந்தையின் திருத்தூது செபப்பணி அமைப்பாக, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் அங்கீகரித்தார். 

06 March 2020, 14:57