தேடுதல்

Vatican News
San Marcello ஆலயத்தில் உள்ள புதுமை மிக்க இயேசுவின் திருச்சிலுவை முன்னர் திருத்தந்தையின் செபம் San Marcello ஆலயத்தில் உள்ள புதுமை மிக்க இயேசுவின் திருச்சிலுவை முன்னர் திருத்தந்தையின் செபம் 

இறைவன் மக்களைக் காக்க, திருத்தந்தையின் சிறப்பு வேண்டுதல்

மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள Salus Popoli Romani அன்னை மரியாவின் திருஉருவப்படத்திற்கு முன்னும், San Marcello ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமை மிக்க இயேசுவின் திருச்சிலுவை முன்னரும் திருத்தந்தை செபித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இறைவன் மக்களைக் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 15, இஞ்ஞாயிறு மாலை, உரோம் நகரிலுள்ள இரு கோவில்களுக்குச் சென்று செபித்தார்.

Salus Popoli Romani, அதாவது, ‘உரோம் மக்களின் பாதுகாவல்’ என்ற பெயரில், உரோம் நகரின், மேரி மேஜர் பெருங்கோவிலில் வணங்கப்பட்டுவரும், அன்னை மரியாவின் திருஉருவப்படத்திற்கு முன்னர், மக்களுக்காக செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் பின்னர், Via del Corso என்ற சாலையில் உள்ள San Marcello என்ற கோவிலுக்குச் சென்று செபித்தார்.

முக்கியத் தேவையின்றி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற அரசுக் கட்டுப்பாட்டினால், இத்தாலிய சாலைகள் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி இருந்த நிலையில், Via del Corso சாலையில், சிறிது தூரம் நடந்தே சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் San Marcello கோவிலை அடைந்தார்.

மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டுள்ள Salus Popoli Romani அன்னை மரியாவின் திருஉருவப்படத்திற்குமுன் செபித்ததுபோலவே, San Marcello ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த புதுமை மிக்க இயேசுவின் திருச்சிலுவை முன்னரும் திருத்தந்தை செபித்தார்.

உரோம் நகரை, பெரிய கொள்ளைநோய் தாக்கிய வேளையில், இச்சிலுவைதான், 1522ம் ஆண்டு, நகர் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு, கொள்ளை நோய் பரவலை தடுக்க உதவியது என்பது வரலாற்றுக் குறிப்பு.

16 March 2020, 15:21