தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கும் கர்தினால் Krajewski திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கும் கர்தினால் Krajewski  (ANSA)

தொற்றுநோய் பாதிப்பு துறவு இல்லங்களில் திருத்தந்தையின் பிரதிநிதி

திருத்தந்தையின் அருகாமையையயும் அக்கறையையும் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டுள்ள துறவுசபை இல்லங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் கூறினார் கர்தினால் Krajewski

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரிலும் அதற்கு அருகிலும் உள்ள இரு பெண் துறவு சபை இல்லங்கள் கொரோனா தொற்று நோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தந்தையின் சார்பாக அவ்வில்லங்களைச் சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளார் கர்தினால் Konrad Krajewski.

உரோம் நகருக்கு அருகேயுள்ள குரோத்தா பெராத்தா என்னுமிடத்திலுள்ள புனித கமிலஸின் புதல்வியர் துறவு சபை தலைமை இல்லத்திற்கும், உரோம் நகரின் கசலினா பகுதியில் உள்ள புனித பவுல் துறவு சபை இல்லத்திற்கும் சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அருகாமையையும் அக்கறையையும் தெரிவித்து வந்ததாக கூறினார், திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கும் கர்தினால் Krajewski.

தொற்று நோயின் காரணமாக வெளியே செல்லமுடியாமல் தங்களையே தனிமைப்படுத்தியிருக்கும் இவ்விரு துறவு சபை இல்லங்களுக்கும் தேவையான பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் கூறினார் அவர்.

மேலும்,  பிறிதொரு துறவு சபையால் நடத்தப்படும் புனித 23ம் ஜான் முதியோர் இல்லத்தில் பணியாற்றும் இருவருக்கு இந்த தொற்று நோய் பரவியுள்ள நிலையில், அவ்வில்லத்திற்கும் சென்று தேவையான பொருட்களை திருத்தந்தையின் சார்பில் வழங்கி வந்துள்ளார் கர்தினால் Krajewski.

உரோம் நகருக்கு வெகு அருகில் உள்ள குரோத்தா பெராத்தா என்ற இடத்திலுள்ள பெண் துறவு இல்லத்தில் 40 அருள்சகோதரிகளும், உரோம் நகரின் ஒரு துறவு இல்லத்தில் 19 அருள்சகோதரிகளும் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த வெள்ளி முதல் இவ்விரு துறவு இல்லங்களும் எவ்வித வெளியுலகத் தொடர்புமின்றி தங்களை தனிமைப்படுத்தி வாழ்கின்றன.

24 March 2020, 15:41