தேடுதல்

Vatican News
'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' - உலக வேண்டுதல் 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' - உலக வேண்டுதல் 

'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' - உலக வேண்டுதல்

உலக கிறிஸ்தவர்கள் இணைந்து செபிக்குமாறு, திருத்தந்தை விடுத்த அழைப்பை ஏற்று, தாங்களும் இம்முயற்சியில் இணைவதாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையும், ஆங்கிலிக்கன் பேராயரும் அறிக்கை விடுத்திருந்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இணைந்து, மார்ச் 25 இப்புதனன்று, உரோம் நேரம் நண்பகல் 12 மணிக்கு மேற்கொண்ட 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற இறைவேண்டல், வத்திக்கான் பாப்பிறை இல்லத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பானது.

உலகளாவிய இந்த இறைவேண்டலைத் தொடர்ந்து, புனித பேதுரு பெருங்கோவிலில் கடந்த சில நாள்களாக, கர்தினால் ஆஞ்செலோ கொமாஸ்த்ரி அவர்களின் வழிநடத்துதலுடன் நடைபெற்றுவரும் செபமாலை, மற்றும் நண்பகல் மூவேளை செபம் ஆகியவை, நேரடியாக ஒளிபரப்பாயின.

மார்ச் 22, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாப்பிறை இல்லத்திலிருந்து வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையின்போது, மார்ச் 25ம் தேதி உலகின் அனைத்து கிறிஸ்தவர்களும் இணைந்து செபிக்கும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, தாங்களும் இம்முயற்சியில் இணைவதாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, முதலாம் பார்த்தலோமேயு, மற்றும் ஆங்கிலிக்கன் சபையின் உலகத்தலைவர், பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆகியோர் அறிக்கை விடுத்திருந்தனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், "#இணைந்துசெபிப்போம்" என்ற ஹாஷ்டாக்குடன் இப்புதனன்று தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் விடுத்திருந்த இந்த உலகளாவிய முயற்சிக்கு உறுதுணையாக, உலகெங்கும் உள்ள பல கோவில்களில், உரோம் உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணிக்கு சிறிது முன்னதாக, மக்களுக்கு இம்முயற்சியைக் குறித்து நினைவுறுத்த, ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன.

25 March 2020, 16:10