தேடுதல்

Vatican News
புனித வெள்ளியன்று, உரோம் கொலோசேயும் எனும் இடத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி புனித வெள்ளியன்று, உரோம் கொலோசேயும் எனும் இடத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி  (REMO CASILLI)

வட இத்தாலிய மக்களுக்கு திருத்தந்தை மடல்

கோவிட்-19 தொற்றுக்கிருமியால் துன்புறும் எல்லாருக்காகவும் செபிக்கிறேன், அவர்களுடன் ஒன்றித்திருக்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள திறந்த மடல் ஒன்று, பதுவை நகர் தினத்தாளில் வெளியிடப்பட்டுள்ளது.

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுக்கிருமியால் துன்புறும் எல்லாருடனும், எனது அருகாமையையும், செபங்களையும் தெரிவிக்கிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு திறந்த மடல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

திருத்தந்தையின் இம்மடல், இத்தாலியின் பதுவை நகரில் வெளியாகும் "Il Mattino" என்ற தினத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த பதுவை நாளிதழ் வழியாக, அந்த நகரம் முழுவதற்கும், அனைத்து கிறிஸ்தவ சமுதாயங்கள், அவர்களின் ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்கள் அனைவருக்கும் எனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறேன் என்று, திருத்தந்தையின் அந்த மடல் கூறுகிறது. 

இந்த மடலை, அனைவருக்குமென அடையாளப்பூர்வமாக எழுதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த துன்ப நேரங்களில்கூட கடவுள் நம்மிடம் பேசுகிறார், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு இதுவும் ஒரு காரணம் என்றும், கொரோனா தொற்றுக்கிருமியால், இத்தாலியின் மற்ற பகுதிகளைப் போன்று, நீங்களும், துன்பத்தையும் மரணத்தையும் அனுபவித்து வருகின்றீர்கள், இக்காரணத்தினால், நான் உங்களோடு செபத்திலும், மனிதாபிமான நிலையிலும் ஒன்றித்திருக்கிறேன் என்று, அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

நன்மனம், கடமையுணர்வு, ஒத்துழைப்பு

இந்த ஆபத்தான சூழல், நன்மனம்கொண்ட மனிதர்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும், தாங்கள் ஆற்றவேண்டியதைவிட அதிகமாகச் செய்யும் மருத்துவ மற்றும், உபமருத்துவப் பணியாளர்களை, முதலில் முக்கியமாக நினைத்துப் பார்க்கிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்மனம், உறுதியான பொறுப்புணர்வுடனும், தகுந்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் இணையும்போது, உலகுக்கு மிகவும் தேவைப்படும் கூடுதல் மதிப்பாக மாறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“பதுவை, தன்னார்வலர் 2020ன் ஐரோப்பிய தலைநகர்"

இவ்வாண்டு வட இத்தாலிய நகரமான பதுவை, தன்னார்வலப் பணியின் ஐரோப்பிய தலைநகர் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பதுவை நகர மக்கள் தங்களின் மரபணு பற்றி உலகுக்கு அறிவிக்க, இது நல்ல வாய்ப்பு என்றும் கூறியுள்ளார். 

"இத்தாலியை ஒன்றுசேர்ந்து நெய்வோம்" என்ற இலக்குடன் இவ்வாண்டைச் பதுவை மக்கள் சிறப்பித்து வருகின்றனர், இக்காலத்தில் பழுதுபார்ப்பதைவிட, சரிப்படுத்துவதைவிட, பறக்கணிக்கவே சோதிக்கப்படுகிறோம், சமுதாயத்தில் எவரும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதில் கவனம் செலுத்துவோம் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

வருகிற ஏப்ரல் 10, புனித வெள்ளியன்று, உரோம் கொலோசேயும் எனும் இடத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை பக்திமுயற்சி தியானச் சிந்தனைகளை, பதுவை நகர்  “Due Palazzi” சிறையைச் சார்ந்தவர்கள் எழுதுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 March 2020, 15:57