தேடுதல்

Vatican News
2018ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் ‘Divino Amore’ திருத்தலத்தில் 2018ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் ‘Divino Amore’ திருத்தலத்தில்  (ANSA)

‘Divino Amore’ திருத்தல அன்னை மரியாவிடம் வேண்டுதல்

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியிலிருந்து, இறைவன், உரோம் நகரையும், இத்தாலியையும், இவ்வுலகையும் காப்பதற்கு, அன்னை மரியாவின் பாதுகாப்பையும், பரிந்துரையையும் வேண்டுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியிலிருந்து, இறைவன், உரோம் நகரையும், இத்தாலி நாட்டையும், இவ்வுலகையும் காப்பதற்கு, அன்னை மரியாவின் பாதுகாப்பையும், பரிந்துரையையும் வேண்டுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறப்பு செபங்களும், உண்ணாநோன்பும்

COVID-19 தொற்றுக்கிருமியின் ஆபத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்படவேண்டுமென்ற வேண்டுதலுடன், உரோம் மறைமாவட்ட மக்கள், மார்ச் 11, இப்புதனன்று சிறப்பு செபங்களும், உண்ணாநோன்பும் மேற்கொள்வதற்கு, திருத்தந்தையின் பெயரால் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்கள் விண்ணப்பித்திருந்தார்.

இந்த சிறப்பு நாளில், இறைவனின் அன்பு என்று பொருள்படும் ‘Divino Amore’ திருத்தலத்தில் உள்ள அன்னை மரியாவின் ஆலயத்தில், இப்புதன் மாலை, கர்தினால் தே தொனாத்திஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலிக்கு முன்னதாக, திருத்தந்தையின் காணொளிச் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உரோம் நகரைக் காத்த அன்னை மரியா

1944ம் ஆண்டு, நாத்சி படையின் ஆக்ரமிப்பிலிருந்து உரோம் நகரைக் காத்தருள, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உரோம் மக்களோடு இணைந்து, இத்திருத்தலத்தில், அன்னை மரியாவின் திருஉருவத்திற்கு முன்னர், வேண்டியதுபோல், தற்போது, இந்த தொற்றுக்கிருமியின் தாக்குதலிலிருந்து உரோம் நகரைக் காக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் மக்களுடன் இணைந்து செபித்துள்ளார் என்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், மத்தேயோ புரூனி (Matteo Bruni) அவர்கள் கூறினார்.

மேலும், கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து மக்களைக் காப்பதற்குப் போராடிவரும் நலத்துறைப் பணியாளர்களுக்கு ஆதரவாக, சிறப்பு நிதி திரட்டப்படும் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

11 March 2020, 15:03