தேடுதல்

Vatican News
உரோம் ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் ஒப்புரவு அருளடையாளம் உரோம் ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் ஒப்புரவு அருளடையாளம் 

அருள்பணியாளர் இல்லாதபோது ஒப்புரவு அருளடையாளம்

ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஓர் அருள்பணியாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், கடவுளோடு உரையாடுங்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அவசரகால நேரங்களில் ஒப்புரவு அருளடையாளத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்து, மார்ச் 20, இவ்வெள்ளி காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்குமுன் உங்களில் பலர் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறச் செல்வீர்கள், கொரோனா தொற்றுக்கிருமி தாக்கத்தால் எல்லாரும் வீடுகளிலேயே இருக்கவேண்டிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது, நான் ஆண்டவரோடு சமாதானம் செய்துகொள்ள விரும்புகிறேன், அவர் என்னைத் தழுவிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன், அருள்பணியாளர் இல்லாமல் இதை நான் எப்படி செய்வது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது என்று திருத்தந்தை கூறினார்.

கடவுளோடு உரையாடுங்கள்

அருள்பணியாளர் இல்லாமல் கடவுளின் மன்னிப்பை பெறும் முறை பற்றி மறைக்கல்வி கூறுவதுபோல் செயல்படுங்கள், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு ஓர் அருள்பணியாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், கடவுளோடு உரையாடுங்கள், அவர் உங்கள் தந்தை, ஆண்டவரே, நான் இதை, அதைச் செய்தேன், என்னை மன்னித்தருளும் என்று அவரிடம் கூறுங்கள் என்று எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உள்ளம் நொறுங்குண்டவர்களாய், உங்கள் முழு இதயத்தோடு ஆண்டவரிடம் மன்னிப்பை இறைஞ்சுங்கள், பிறகு ஒப்புரவு அருளடையாளம் பெறச் செல்வேன் என்று அவரிடம் வாக்குக்கொடுங்கள் என்றுரைத்த திருத்தந்தை, நீங்கள் கடவுளின் அருளுக்கு உடனடியாகத் திரும்புவீர்கள், நீங்களே அவர் பக்கம் ஈர்க்கப்படுவீர்கள் என்று கூறினார்.

வீட்டிற்குத் திரும்பும் பழக்கம், ஒப்புரவு அருளடையாளத்தில் உயிர் பெறுதலாகும் என்றும், திருத்தந்தை விளக்கினார்.

20 March 2020, 15:18