தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் 13.03.2013 திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் 13.03.2013 

திருத்தந்தை பிரான்சிஸ், தலைமைப்பணியில் 7 ஆண்டுகள்

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமியால் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கென, இத்தாலிய காரித்தாஸ் அமைப்புக்கு, ஒரு இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 13, இவ்வெள்ளியன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியில் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, செபமும் நல்வாழ்த்தும் கலந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளார், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Gualtiero Bassetti.

இந்த நிறைவு நாளில், கடவுள் திருத்தந்தைக்கு வழங்கியுள்ள எண்ணற்ற கொடைகளுக்கு நன்றி சொல்வதாகவும், திருத்தந்தையின் வார்த்தைகள், அவை தொனிக்கும் முறை, காயமடைந்த மற்றும், மீட்கப்பட்ட சமுதாயத்திற்குத் தொடர்ந்து அயராது ஆற்றிவரும் பணிகள் போன்ற எல்லாவற்றிற்காகவும், திருத்தந்தைக்கு நன்றி சொல்ல விரும்புவதாகவும் கர்தினால் கூறியுள்ளார்.   

நாம் எல்லாரும் கடவுளின் கொடைகள், நாம் சந்திக்கும் சகோதரர், சகோதரிகளுக்காக நாம் வாழ வேண்டியவர்கள் என்பதை திருத்தந்தை நினைவுபடுத்தி வருகிறார் என்றும், அவசரகால மற்றும், நெருக்கடியான சூழல்களுக்கு திருத்தந்தை மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் என்றும், குறிப்பிட்டுள்ளார், கர்தினால் பஸ்ஸெத்தி.   

திருத்தந்தை நல்ல உடல்நலத்துடன் வாழ செபிப்பதாக உறுதியளித்துள்ள கர்தினால், இந்நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கிருமியால் துன்புறும் அனைவருக்காவும், இத்தாலியத் திருஅவைக்காகவும் செபிக்குமாறும் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாலிய காரித்தாசுக்கு உதவி

இதற்கிடையே, இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமியால் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கென, இத்தாலிய காரித்தாஸ் அமைப்புக்கு, ஒரு இலட்சம் யூரோக்களை நன்கொடையாக அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பாவில் இத்தொற்றுக்கிருமி நெருக்கடியை இத்தாலி நாடு அதிகமாக எதிர்கொண்டுவரும்வேளை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வழியாக, திருத்தந்தை இந்த நன்கொடையை இத்தாலிய காரித்தாசுக்கு வழங்கியுள்ளார்.

13 March 2020, 15:17