தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை 220320 மூவேளை செப உரை 220320 

செபம் வழி நோயாளிகளின் அருகிலிருப்போம்

திருத்தந்தை : தொற்று நோயின் அச்சுறுத்தலை இவ்வுலகம் எதிர்கொண்டுவரும் வேளையில், அனைவரும் ஒன்றிணைந்து விண்ணுலகை நோக்கி நம் குரலை எழுப்புவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுநோயால் துன்புறுவோர், மற்றும், தனிமையை அனுபவிப்போருடன் ஒன்றிணைந்த செபம், கருணை, மற்றும், அக்கறை வழியாக, நம் அருகாமையை அவர்கள் உணரச் செய்யவேண்டும் என, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காணொளி வழியாக, தன் நூலக அறையிலிருந்து, மார்ச் 22, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபத்தை செபித்து, உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொற்று நோயின் அச்சுறுத்தலை இவ்வுலகம் எதிர்கொண்டுவரும் வேளையில், அனைவரும் ஒன்றிணைந்து விண்ணுலகை நோக்கி நம் குரலை எழுப்புவோம் என அழைப்புவிடுத்தார்.

இம்மாதம் 25ம் தேதி, அதாவது, வரும் புதனன்று, அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட பெருவிழா நாளில், அனைத்து கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து, இயேசு கற்பித்த செபத்தை செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஊர்பி எத்  ஓர்பி என்ற சிறப்பு ஆசீர்

உயிர்த்த இயேசுவின் வெற்றியைக் கொண்டாட இத்தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தயாரித்துவரும் வேளையில், நம் அனைவரின் ஒன்றிணைந்த செபத்திற்கு இறைவன் செவிசாய்ப்பாராக, எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் வெள்ளியன்று சிறப்பு செபவழிபாடு ஒன்றை நடத்த உள்ளதாகவும், அதன்பின் அதே நாளில் புனித பேதுரு மேல் முகப்பு மாடத்திலிருந்து, ஊருக்கும் உலகுக்கும் என்ற ஊர்பி எத் ஓர்பி சிறப்பு ஆசீரை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக ஆன்மீக முறையில் இதில் பங்குபெற்று பயனடையுமாறு ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

ஊர்பி எத்  ஓர்பி என்ற சிறப்பு ஆசீர்,  ஒவ்வோர்  ஆண்டும் இருமுறை மட்டுமே, அதாவது, கிறிஸ்து பிறப்பு விழா, இயேசுவின் உயிர்ப்பு விழா ஆகிய இரு நாட்களில் மட்டுமே வழங்கப்படும் ஒன்றாகும்.

வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தையின் தலைமையில் இடம்பெறும் இந்த செப வழிபாடு, உரோம் நேரம் மாலை 6 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் இரவு 10.30 மணிக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.

மேலும், ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், குரோவேஷியா நாட்டில் துன்புறும் மக்களுடன் தன்  அருகாமையை வெளியிடுவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு காலை இடம்பெற்ற நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள குரோவேஷியா நாட்டு மக்களுக்கு, இந்த இயற்கைப் பேரிடரை தாங்கும் பலத்தையும் ஒருமைப்பாட்டையும் இறைவன் வழங்குவாராக என செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

22 March 2020, 12:40