தேடுதல்

"SUPER NUNS" திட்டத்தை துவங்கி வைக்கிறார் திருத்தந்தை "SUPER NUNS" திட்டத்தை துவங்கி வைக்கிறார் திருத்தந்தை  

மனித வர்த்தகத்திற்கெதிரான அச்சமற்ற அருள்சகோதரிகள்

புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் விழா நாள், மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்காக செபம் மற்றும், மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு உலக நாளாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்காக செபம் மற்றும், மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வு உலக நாளான, பிப்ரவரி 8, இச்சனிக்கிழமையன்று, அச்சமற்ற அருள்சகோதரிகள் குழுமம் என்ற ஓர் அமைப்பை, இச்சனிக்கிழமை காலையில் ஆரம்பித்து வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த உலக நாளை முன்னிட்டு, மனித வர்த்தகம் ஒழிக்கப்பட உழைக்கும் தலித்தா கும் என்ற உலகளாவிய அருள்சகோதரிகள் அமைப்பு மற்றும், கலிலேயோ அறக்கட்டளையின் சில பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை காலையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "SUPER NUNS" குழுமம் என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

தலித்தா கும் அமைப்பைச் சேர்ந்த அருள்சகோதரிகள், கடந்த பத்து ஆண்டுகளாக, மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது போன்ற பணிகளில் ஆரவாரமின்றி ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சகோதரிகளின் பணிக்கு நிதியுதவிக்கு அழைப்பு விடுக்கும் விதமாக, திருத்தந்தை, "SUPER NUNS" குழுமம் என்ற திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த குழுமத்தை, UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு நடத்துகின்றது.

டுவிட்டர்கள்

புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் விழாவான, பிப்ரவரி 8, இச்சனிக்கிழமையன்று #PrayAgainstTrafficking, #PrayAgainstTrafficking ஆகிய இரண்டு ஹாஷ்டாக்குடன், டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களின் பாதுகாவலரான புனித பக்கித்தா, அடிமைமுறையின் வேதனையை எதிர்கொண்டவர் மற்றும், ஆண்டவரைச் சந்திப்பதில் கிடைக்கும் சுதந்திரம் மற்றும் மகிழ்வுக்குச் சான்று பகர்ந்தவர். இந்த மகிழ்வில் அனைவரும் வாழவும், அடிமைமுறையின் சங்கிலிகளைத் தகர்த்தெறியவும் நாம் எல்லாரும் செபிப்போம்" என்று, தன் முதல் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.

“மனித வர்த்தகத்திற்கு எதிராக, நாம் எல்லாரும் ஒன்றிணைவோம். ஒன்றிணைந்தால் மட்டுமே, இந்த வடுவைத் தோற்கடிக்க முடியும், மற்றும், இதற்குப் பலியானவர்களைப் பாதுகாக்க முடியும். இந்த நம் அர்ப்பணத்தைத் தாங்கிப் பிடிப்பது செபமே” என்ற சொற்களை, தன் இரண்டாவது டுவிட்டரில் திருத்தந்தை பதிவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2020, 15:35