தேடுதல்

வத்திக்கான் நீதித்துறை அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் நீதித்துறை அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  

வத்திக்கான் சட்டச் சீர்திருத்தங்கள், தூதுரைப்பணியின் ஓர் அங்கம்

இறுதி தீர்ப்பு பற்றிய நினைவு, நம் கடமையை, உண்மையுடனும், தாழ்ச்சியுடனும் ஆற்றுவதற்கே நம்மை ஊக்கப்படுத்துகின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் நீதித்துறை அதிகாரிகளின் பணிகளில் தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அண்மையில் நடைபெற்ற நிதிசார்ந்த புலன்விசாரணைகள், வத்திக்கானில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை வைத்து நடத்தப்பட்டன எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, வத்திக்கான் நீதித்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

வத்திக்கான் நாட்டு நீதிமன்றத்தின் 91வது நீதி ஆண்டை முன்னிட்டு, நீதி மேலாண்மை மற்றும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் மற்றும், அலுவலகர்களை, பிப்ரவரி 15, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

வத்திக்கானில் இடம்பெறும் சட்டச் சீர்திருத்தங்கள், திருஅவையின் தூதுரைப்பணியின் ஒரு பகுதி என்றுரைத்த திருத்தந்தை, நீதி, ஒவ்வொருவரின் சொந்த மனமாற்றத்திலிருந்து துவங்குகின்றது என்றும், அண்மையில் இடம்பெற்ற சீர்திருத்தங்கள் சந்தேகத்துக்குரிய நிதிச் சூழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது என்றும் கூறினார்.

இயேசுவால் பரிந்துரைக்கப்பட்ட நீதியைப் போதிக்கும் நற்செய்தி பற்றியும், ஒருவர் ஒருவருக்கிடையேயுள்ள உறவுகளை நெறிப்படுத்தும் சட்டங்கள் மற்றும், அறநெறி விழுமியங்கள் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இயேசுவால் பரிந்துரைக்கப்பட்ட நீதி, அறிவுக்கு மட்டும் வைக்கப்படும் வெறும் விதிமுறைகள் அல்ல, மாறாக, பொறுப்பில் உள்ளவர்களின் இதயத்தை வழிநடத்துவதற்கென உள்ளது என்று கூறினார்.

தவறுகளின் காரணங்களையும், சட்டத்தை மீறுபவர்களின் பலவீனத்தையும் புரிந்துகொள்வதற்கு தொடர்ந்து தங்களை அர்ப்பணிக்குமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நவீனமயமாக்கலின் அவசியத்தால் உந்தப்பட்டு, வத்திக்கான் சட்ட அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

வத்திக்கான் நகரப் பாதுகாப்புப் பணியிலுள்ள காவல்துறை, நீதியை ஊக்குவிக்கும் அலுவலகத்திற்கு ஆதரவாக, புலன்விசாரணை நடவடிக்கைகளை நடத்தியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, சீர்திருத்தத்திற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் மக்களைச் சார்ந்துள்ளன என்றும் கூறினார். 

நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள் என்ற இயேசுவின் திருச்சொற்களை, நினைவுபடுத்திய திருத்தந்தை, நாம் இவ்வுலகில் வழங்கும் நீதி குறித்த எல்லாத் தீர்ப்புகளும், இறுதி நாளில் ஆண்டவரின் தீர்ப்புக்காக நாம் காத்திருக்கும் இறை நீதியைச் சந்திக்கும் இறுதி எல்லையைக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

இது நம் கடமையை, உண்மையுடனும், தாழ்ச்சியுடனும் ஆற்றுவதற்கே நம்மை ஊக்கப்படுத்துகின்றது என்று, தன்னை சந்திக்க வந்திருந்த, வத்திக்கான் நீதி, சட்டம், ஒழுங்கு அமைப்பு முறை உறுப்பினர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2020, 13:22