தேடுதல்

Vatican News
GVM நோயாளர் பராமரிப்பு மற்றும், ஆய்வு அமைப்பினர் சந்திப்பு GVM நோயாளர் பராமரிப்பு மற்றும், ஆய்வு அமைப்பினர் சந்திப்பு  (Vatican Media)

மருந்துகளும், மருத்துவப் பணிகளும் மனிதருக்கு ஏற்றதாய்...

இத்தாலியில் 1973ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட, GVM நோயாளர் பராமரிப்பு மற்றும் ஆய்வு அமைப்பு, பிரான்ஸ், அல்பேனியா, போலந்து, இரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளில், 9,000த்திற்கு அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மருத்துவமனைகள், மேலும் மேலும் வரவேற்பு மற்றும், ஆறுதலளிக்கும் இல்லங்களாய், அவை, நட்புணர்வு, புரிந்துணர்வு, கருணை, பிறரன்பு போன்ற பண்புகளை, நோயாளிகள் காணும் இல்லங்களாக அமையுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

நோய்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும், இத்தாலியின் வில்லா மரியா மருத்துவ அமைப்பின் ஏறத்தாழ 250 உறுப்பினர்களை, பிப்ரவரி 01, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளி, எண் அல்ல, அவர், மனித சமுதாயத்தின் தேவையை எதிர்பார்த்திருக்கும் ஒரு மனிதர் என்று கூறினார்.

இத்தாலியில் மட்டுமன்றி, வேறு நாடுகளிலும் பணியாற்றும் இக்குழுவின் மருத்துவர்கள், செலவிலியர், அலுவலகர்கள் மற்றும், நிர்வாகத்தினர் ஆற்றும் நற்பணிகளுக்கு, தன் வாழ்த்தையும் தெரிவித்த திருத்தந்தை, அவர்களின் பணிகளை ஊக்கப்படுத்தினார்.

தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியும், சமுதாய, பொருளாதார மற்றும், அரசியல் சூழல்களில் ஏற்பட்டுவரும் பெரிய மாற்றங்களும், மருத்துவமனைகள் மற்றும், நலவாழ்வு அமைப்புகளின் வாழ்வுமுறையையும் மாற்றியுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, நலப்பணியாளர்களின் எல்லா நிலைகளிலும், குறிப்பாக, தொழில்நுட்ப மற்றும், நன்னெறி வாழ்வியல் முறைகளில் புதிய கலாச்சாரம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.

மனிதர் மையப்படுத்தப்பட

பொருளாதார-நிதி சார்ந்த ஆதாயத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் அமைப்புமுறைகளில் அமுங்கிவிடாது, நோயாளிகளுக்கு எப்போதும் அருகிலிருக்கும் நடைமுறைகளைக் கைக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, இதன் வழியாக, மருந்துகளும், மருத்துவமனைகளும், நலவாழ்வு மையங்களும், மனிதரை மையப்படுத்துவதாய் அமைந்திருக்கும் என்று கூறினார்.

கிறிஸ்தவ நலப்பணியாளர்கள், தங்களின் பணிகளை ஆற்றுகையில், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்ற இயேசுவின் திருச்சொற்கள் உணர்வில் பணியாற்றுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மருத்துவமனைகள், நம் எல்லாரின் வாழ்வுக்கு ஒரு செய்தியைத் தருகின்றது என்றும், துன்புறும் மனிதர், மீட்பு மற்றும், நம்பிக்கை எனும் இறைவனின் கொடையைப் பெறுவதன் தேவையையும், மதிப்பையும் அதிகமாக உணர்கிறார் என்றும், அதற்கு  நோயாளிகளுக்கு அருகிலிருப்பவர்களும் உதவுகின்றனர் என்றும், திருத்தந்தை கூறினார்.

நோயாளிகளுடன் தான் ஆன்மீக அளவில் அருகிலிருப்பதாகவும், அவர்கள், பொறுமை, நம்பிக்கை, மனஉறுதி போன்ற கொடைகளைப் பெறுவதற்கு ஆண்டவரிடம் செபிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியளித்தார்.

இத்தாலியின் GVM நோயாளர் பராமரிப்பு மற்றும் ஆய்வு அமைப்பு, 1973ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.  இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு, இந்த அமைப்பினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 01, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தனர்.

01 February 2020, 15:02