தேடுதல்

பின்னணியில் பிரசில் அமேசான் காடுகள் பற்றியெரியும் காட்சி பின்னணியில் பிரசில் அமேசான் காடுகள் பற்றியெரியும் காட்சி 

#QueridaAmazonia – திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

"தாங்கள் வாழும் அமேசான் பகுதிகளில் வேரூன்றி, தாராள அர்ப்பண உணர்வுடன் அமேசானின் உண்மை இயல்பைக் காட்டும் புதிய முகங்களை திருஅவைக்கு வழங்கும் கிறிஸ்தவக் குழுமங்களை, நான் கனவு காண்கிறேன்" - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியில் நிலவும் பிரச்சனைகளையும், வாய்ப்புக்களையும் மையமாகக் கொண்டு வத்திக்கானில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின் விளைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய திருத்தூது அறிவுரை மடலில் அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களில் சிலவற்றை, சனவரி 12, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டார்.

#QueridaAmazonia என்ற 'ஹாஷ்டாக்'குடன் இப்புதன் மதியம் வரை இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை, பிற்பகலில் மேலும் மூன்று டுவிட்டர் செய்திகளை இத்திருத்தூது மடலை மையப்படுத்தி வெளியிட்டார்.

"நம்மீது முதலில் அக்கறை காட்டும் ஆண்டவர், நமது சகோதரர், சகோதரிகள் மீதும், நமக்கு அவர் வழங்கும் சுற்றுச்சூழல் மீதும் அக்கறை காட்டுமாறு சொல்லித்தருகிறார். இதுவே, நமக்குத் தேவையான முதல் சுற்றுச்சூழல் இயல்" என்ற சொற்கள், திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

இந்த திருத்தூது அறிவுரை மடலில், திருத்தந்தை வெளியிட்டிருக்கும் கனவுகளில், நான்காவது கனவாக அவர் கூறியுள்ள சொற்களை, தன் நான்காவது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.

"தாங்கள் வாழும் அமேசான் பகுதிகளில் வேரூன்றி, தாராள அர்ப்பண உணர்வுடன் அமேசானின் உண்மை இயல்பைக் காட்டும் புதிய முகங்களை திருஅவைக்கு வழங்கும் கிறிஸ்தவக் குழுமங்களை, நான் கனவு காண்கிறேன்" என்ற கருத்து, திருத்தந்தையின் நான்காவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றது.

"ஒவ்வொரு மனிதரையும் அளவற்ற வகையில் அன்புகூரும் கடவுளையும், நமக்காக சிலுவையில் அறையப்பட்டு, நம் வாழ்வில் உயிர்த்தெழும் இயேசு கிறிஸ்துவையும் நற்செய்தியாகக் கேட்பதற்கு, அமேசானில் வாழும் மக்கள், உரிமை பெற்றுள்ளனர்" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஐந்தாவது டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2020, 14:55