தேடுதல்

Vatican News
2020.02.10 Querida Amazonia - Puerto Maldonado 2020.02.10 Querida Amazonia - Puerto Maldonado 

திருத்தூது அறிவுரை மடலையொட்டி டுவிட்டர் செய்திகள்

'துயருறுவோர் பேறுபெற்றோர்' என்ற கூற்றையும், "Querida Amazonia" திருத்தூது அறிவுரை மடலையும் மையப்படுத்தி திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்திகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசு வழங்கிய 'பேறுபெற்றோர்' வாக்கியங்களை மையப்படுத்தி தன் புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், #GeneralAudience மற்றும் #Beatitudes என்ற 'ஹாஷ்டாக்'குகளுடன், இப்புதனன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்" (மத். 5:4). அன்புடன் இணைந்து வரும் துன்பத்தை வரவேற்பவர்கள், அறிவும், பேறும், பெற்றவர்கள். ஏனெனில், இறைவனின் கனிவாக விளங்கும் தூய ஆவியாரின் ஆறுதலை அவர்கள் பெறுவர் - என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், அமேசான் ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய திருத்தூது அறிவுரை மடல், பிப்ரவரி 12, இப்புதனன்று, வெளியானதையொட்டி, இம்மடலின் தலைப்பான, #QueridaAmazonia என்ற 'ஹாஷ்டாக்'குடன் மேலும் சில டுவிட்டர் செய்திகளை திருத்தந்தை வெளியிட்டார்.

"நான் இந்த திருத்தூது அறிவுரையை உலகினர் அனைவருக்கும் வழங்குகிறேன். இதன் வழியே 'நமக்குச் சொந்தமான' அந்த நிலத்தின் மீது மக்களின் பாசமும், அக்கறையும் விழிப்படைய வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளேன்" என்ற சொற்கள், முதல் டுவிட்டர் செய்தியாக வெளியானது.

"வறியோர், மண்ணின் மைந்தர், மற்றும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற சகோதரர், சகோதரிகள் ஆகியோரின் சார்பாக, அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கும், அவர்கள் மாண்பு உயர்த்தப்படுவதற்கும் போராடும் ஒரு அமேசான் பகுதியை நான் கனவு காண்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தை வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

12 February 2020, 15:02