தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது நோயாளிகளை சந்தித்த திருத்தந்தை - (19 பிப். 2020) புதன் மறைக்கல்வியுரையின்போது நோயாளிகளை சந்தித்த திருத்தந்தை - (19 பிப். 2020)  (AFP or licensors)

அரிய நோயினால் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு சம வாய்ப்புக்கள்

“அரிய நோய்” விழிப்புணர்வு உலக நாள், ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளன்று கடைப்பிடிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அரிய நோய்களால் தாக்கப்பட்டுள்ளவர்கள், சமுதாயத்தில் சம வாய்ப்புக்களைப் பெற்று, அவர்கள் தங்கள் வாழ்வை முழுமையாய் வாழ்வதற்கு வழியமைக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 29, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

பிப்ரவரி 29, இச்சனிக்கிழமையன்று அரிய நோய் விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, அந்நாளை மையப்படுத்தி, #RareDiseaseDay என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“அரிய நோய் விழிப்புணர்வு உலக நாள், இந்நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நம் சகோதரர், சகோதரிகளை ஒன்றிணைந்து பராமரிக்கவும், அந்நோய்கள் குறித்த ஆய்வுகள், மருத்துவச் சிகிச்சைகள், நல உதவிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவும், அவற்றின் வழியாக, அந்நோயாளிகள், சமுதாயத்தில் சம வாய்ப்புக்களை அனுபவிக்கவும், வாழ்வை முழுமையாய் வாழவும் வாய்ப்பை நமக்கு வழங்குகிறது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இச்சனிக்கிழமையன்று வெளியாகியிருந்தன.

“அரிய நோய்”

“அரிய நோய்” விழிப்புணர்வு உலக நாள், ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. அரிய நோய்கள் பற்றி அறியாதிருத்தல் அல்லது அந்நோய்கள் புறக்கணிக்கப்படுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்நாளை, ஐரோப்பிய ஒன்றியம், 2008ம் ஆண்டில் உருவாக்கியது. 2009ம் ஆண்டிலிருந்து இந்த நாள் உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இன்று உலகெங்கும், ஆறாயிரத்திற்கு அதிகமான அரியவகை நோய்களால் தாக்கப்பட்ட மூன்று இலட்சத்திற்கு மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.   

தவக்காலம்

இன்னும், இத்தவக்காலத்தை மையப்படுத்தி, #Lent என்ற ஹாஷ்டாக்குடன் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை, பிப்ரவரி 29, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள திருத்தந்தை, “அன்புக்குரிய குழந்தைகளாக, மன்னிக்கப்பட்ட மற்றும், குணப்படுத்தப்பட்ட பாவிகளாக, நம் அருகிலுள்ள ஆண்டவரோடு பயணம் மேற்கொள்பவர்களாக வாழும்பொருட்டு, ஒப்புரவாக்கப்பட்டவர்களாக அமைப்பதற்கு நம்மை அனுமதிப்போமாக” என்ற வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

29 February 2020, 14:52