தேடுதல்

Vatican News
புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து, தவக்காலப் பரிகாரப் பவனி (கோப்பு படம் 2019) புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து, தவக்காலப் பரிகாரப் பவனி (கோப்பு படம் 2019)  (Vatican Media)

புனித ஆன்செல்ம் ஆலயத்தில் துவங்கும் தவக்கால முயற்சி

"இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகிய பெரும் மறையுண்மைகளை, புதுப்பிக்கப்பட்ட உள்ளங்களுடன் கொண்டாடுவதற்குத் தேவையான தயாரிப்பாக விளங்கும் தகுந்ததொரு காலத்தை, ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ளார்" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 24, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டுக்குரிய தவக்காலச் செய்தியை, “கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்” (2 கொரி. 5:20) என்ற தலைப்பில் வழங்கினார்.

தவக்காலத்தின் முதல் டுவிட்டர் செய்தி

இத்தவக்காலச் செய்தியில், திருத்தந்தை கூறியுள்ள அறிமுக சொற்களை, பிப்ரவரி 26, திருநீற்றுப் புதனன்று தன் டுவிட்டர் செய்தியாக, 'தவக்காலம்' என்று பொருள்படும் #Lent ஹாஷ்டாக்குட.ன் வெளியிட்டார்.

"கிறிஸ்தவ வாழ்வின் மூலைக்கல்லான இயேசுவின் மரணம், உயிர்ப்பு ஆகிய பெரும் மறையுண்மைகளை, புதுப்பிக்கப்பட்ட உள்ளங்களுடன் கொண்டாடுவதற்குத் தேவையான தயாரிப்பாக விளங்கும், தகுந்ததொரு காலத்தை, இவ்வாண்டும், ஆண்டவர் நமக்கு வழங்கியுள்ளார்" என்ற சொற்களை, திருத்தந்தை, இத்தவக்காலத்தின் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

தவக்கால வழிபாட்டு நிகழ்ச்சிகள்

40 நாள்கள் சிறப்பிக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாளான பிப்ரவரி 26, திருநீற்றுப் புதனன்று, மாலை 4.30 மணிக்கு, உரோம் நகரின் ஏழு குன்றுகளில் ஒன்றான அவந்தினோ குன்றிலுள்ள புனித ஆன்செல்ம் ஆலயத்திலும், புனித சபீனா பெருங்கோவிலிலும் தவக்கால வழிபாட்டு நிகழ்ச்சிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்துகிறார்.

பல நூற்றாண்டுகள், திருத்தந்தையர்களால் பின்பற்றப்பட்ட பழமை வாய்ந்த ஒரு மரபு, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களால், 1962ம் ஆண்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றும், அந்த மரபைத் தொடர்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஆன்செல்ம் கோவிலுக்கு வருகை தருகிறார் என்றும், புனித ஆன்செல்ம் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தின் அதிபரான அருள்பணி Bernard Eckerstorfer அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.  

இப்புதன் மாலை 4.30 மணிக்கு, புனித ஆன்செல்ம் ஆலயத்திலிருந்து, தவக்காலப் பரிகாரப் பவனியை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித சபீனா பெருங்கோவிலில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

26 February 2020, 14:50