தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ்  திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

Regnum Christi சபை புதுப்பித்தலில் தொடர்ந்து செயல்பட அழைப்பு

கிறிஸ்துவின் சேனைகள் சபையின் பொதுப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவினருக்கு தன் வாழ்த்தையும், அக்குழுவினரின் பணிகளுக்கு தன் ஊக்கத்தையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 29, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார்.

உக்ரைன் பேராயர் Sviatoslav Shevchuk, ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, பிரான்ஸ் திருப்பீட தூதர் பேராயர் Celestino Migliore, லெபனான் திருப்பீட தூதர் பேராயர் Joseph Spiteri ஆகியோரை, இச்சனிக்கிழமையன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை, உடல்நிலையில் சிறிது தளர்ந்திருப்பதால், இந்நாளில் அவர் அதிகாரப்பூர்வமாகச் சந்திக்கவிருந்த, உயிரியல் அறநெறி பன்னாட்டு கழகத்தினர், கிறிஸ்துவின் சேனைகள் சபையின் பொதுப்பேரவை மற்றும், கிறிஸ்துவின் சேனைகள் சபையின் பொதுநிலையினர் அமைப்பான, Regnum Christi பொது அவையில்   கலந்துகொண்ட பிரதிநிதிகளைச் சந்திக்கவில்லை என்று, திருப்பீட செய்தி தொடர்பாளர் Matteo Bruni அவர்கள் அறிவித்தார்.

ஆயினும், கிறிஸ்துவின் சேனைகள் சபையின் பொதுப்பேரவையில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கென தான் தயாரித்து வைத்திருந்த உரையை அச்சபைக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அப்பொதுப் பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவினருக்கு தன் வாழ்த்தையும், அக்குழுவினரின் பணிகளுக்கு தன் ஊக்கத்தையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, அச்சபையினர் புதுப்பித்தல் பாதையில் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

29 February 2020, 15:01