தேடுதல்

Vatican News
ஹங்கேரி அரசுத்தலைவருடன் திருத்தந்தை ஹங்கேரி அரசுத்தலைவருடன் திருத்தந்தை  (ANSA)

திருத்தந்தை, ஹங்கேரி அரசுத்தலைவர் Áder சந்திப்பு

ஹங்கேரியில் வருகிற செப்டம்பரில் நடைபெறும் 52வது உலக திருநற்கருணை மாநாட்டை முன்னிட்டு, அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு ஹங்கேரி அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஹங்கேரி நாட்டு அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பிப்ரவரி 14, இவ்வெள்ளி காலையில் திருப்பீடம் சென்ற அந்நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை தனியே சந்தித்து உரையாடினார்,  

திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர், பேரருள்திரு Miroslaw Wachowski அவர்களையும், அரசுத்தலைவர் Áder அவர்கள் சந்தித்தார்.

ஹங்கேரி குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், ஹங்கேரிக்கும், திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவு, அவ்வுறவுகள் மீள்உருவாக்கம் பெற்றதன் 30ம் ஆண்டு நிறைவு, வருகிற செப்டம்பரில் புடபெஸ்ட் நகரில் நடைபெறவிருக்கும் 52வது உலக திருநற்கருணை மாநாடு போன்ற தலைப்புகள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது. .

மேலும், சமுதாய நீதி, புலம்பெயரும் மக்களை வரவேற்றல், குடும்பங்களை ஊக்குவித்தல், படைப்பைப் பாதுகாத்தல், இப்போதைய மற்றும், வருங்கால ஐரோப்பா போன்றவை பற்றிய கருத்துப்பரிமாற்றங்களும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, அத்தொடர்பகம் கூறியது. .

திருத்தந்தைக்கு அழைப்பு

மேலும், திருதந்தையைச் சந்தித்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹங்கேரி அரசுத்தலைவர் Áder அவர்கள், ஹங்கேரிக்கு, குறிப்பாக, வருகிற செப்டம்பர் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் உலக திருநற்கருணை மாநாட்டை முன்னிட்டு, அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தான் அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்தார்.

இந்த அழைப்பிற்குப் பதிலளித்த திருத்தந்தை, ஆசியாவுக்குப்பின் பார்ப்போம் என்று கூறியதாக, ஹங்கேரி அரசுத்தலைவர் Áder அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி மூவேளை செப உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹங்கேரி நாட்டில் நடைபெறவிருக்கும் நடைபெறும் உலக திருநற்கருணை மாநாடு பற்றி குறிப்பிட்டார்.

மேலும், வருகிற செப்டம்பரில், இந்தோனேசியாவின் கிழக்கு திமோர், பாப்புவா நியூ கினி, போன்ற நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளக்கூடும் என்ற செய்திகள் பரவி வருகின்றன.

14 February 2020, 14:44