தேடுதல்

Vatican News
புகழ்பெற்ற இத்தாலிய கல்வியாளர்களுடன் திருத்தந்தை புகழ்பெற்ற இத்தாலிய கல்வியாளர்களுடன் திருத்தந்தை  (ANSA)

சமுதாயம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் கல்வி

கல்வி பற்றி நினைத்துப் பார்ப்பது, மனித சமுதாயத்தின் வருங்காலம் பற்றி நினைத்துப் பார்ப்பதாகும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கல்வி பற்றி நினைத்துப் பார்ப்பது, மனித சமுதாயத்தின் வருங்காலம் பற்றி நினைத்துப் பார்ப்பதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 07, இவ்வெள்ளியன்று, ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் பங்குபெற்ற பிரதிநிதிகளிடம் கூறினார்.

"கல்வி: உலகளாவிய ஒப்பந்தம்" என்ற தலைப்பில், பாப்பிறை சமுதாய அறிவியல் கழகம் இவ்வியாழன், இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில், உரோம் நகரில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கால சமுதாயம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில், கல்வியும் ஒன்று என்று கூறினார்.

இக்காலத்தில், குடும்பங்கள், பள்ளிகள், நாடுகள், உலகம், கலாச்சாரங்கள் ஆகியவற்றுக்கிடையே இருக்கின்ற கல்வி பற்றிய உடன்பாடு, பிரச்சனையில் உள்ளது என்று உரையாற்றிய திருத்தந்தை, உடைபட்ட நிலையிலுள்ள இதனை, உலக அளவில், மனத்தாராளம் மற்றும், ஒத்துழைப்பு நிறைந்த, புதுப்பிக்கப்பட்ட முயற்சியினால் சரிசெய்ய முடியும் என்று கூறினார்.

புதிய கல்விக் கொள்கைகளில் குடும்பத்திற்குச் சரியான இடமளிக்கப்பட வேண்டும், ஏனெனில் குழந்தையின் கல்வி, தாயின் உதரம் மற்றும், பிறப்பிலிருந்து துவங்குகிறது என்றும், குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வியில், தாய், தந்தையர், தாத்தா பாட்டிகள் போன்ற குடும்பமனைத்தின் பங்கு புரிந்துகொள்ளப்பட உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை கூறினார்.

வருங்காலத் தலைமுறைகளுக்கு கல்வியளிப்பதற்கு, கல்வியாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும், இவர்கள் ஆற்ற நினைப்பதை, இங்கே, இப்போதே செய்ய வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

"கல்வி: உலகளாவிய ஒப்பந்தம்" என்ற உலகளாவிய கருத்தரங்கு, வருகிற மே மாதம் 14ம் தேதி, வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது. இதற்கு தயாரிப்பாக, பிப்ரவரி 6,7 ஆகிய தேதிகளில் உரோம் நகரில் பாப்பிறை சமுதாய அறிவியல் கழகம் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

07 February 2020, 15:02