தேடுதல்

திருத்தந்தை, உக்ரைன் அரசுத்தலைவர் Zelenskiy சந்திப்பு திருத்தந்தை, உக்ரைன் அரசுத்தலைவர் Zelenskiy சந்திப்பு  

திருத்தந்தை, உக்ரைன் அரசுத்தலைவர் சந்திப்பு

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரில், வன்முறைக்குப் பலியாகியுள்ள மக்களின் தேவைகளில் அக்கறை காட்டுமாறும், நல்லிணக்க வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணிக்குமாறும், போரிடும் தரப்புகளை திருப்பீட அதிகாரிகள் வலியுறுத்தினர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டு அரசுத்தலைவர் Volodymyr Zelenskiy அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 08, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  

இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார், உக்ரைன் அரசுத்தலைவர் Zelenskiy.

2014ம் ஆண்டிலிருந்து போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டின் தற்போதைய சூழலில், போரிடும் தரப்புகள், அப்பாவி மக்களின், முதலில் வன்முறைக்குப் பலியாகியுள்ள மக்களின் தேவைகளில் அக்கறை காட்டுமாறும், உரையாடலில், நல்லிணக்க வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணிக்குமாறும், திருப்பீட அதிகாரிகள் கேட்டுக்கொண்டானர்.  

உக்ரைன் நாட்டின் இப்போதைய மனிதாபிமான சூழல், 2014ம் ஆண்டில் தொடங்கிய போர் தொடர்ந்து அந்நாட்டை பாதித்து வருவது, அமைதியைக் கொணரும் வழிகளைத் தேடுவது போன்ற விடயங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.

உக்ரைன் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், மற்றும், அந்நாட்டில் பல்வேறு கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஅவைகள் ஆற்றும் பொதுநலப் பணிகள் போன்ற தலைப்புகளும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2020, 15:28