தேடுதல்

திருத்தந்தையுடன் மாலி குடியரசுத் தலைவர் Ibrahim Boubacar Keïta திருத்தந்தையுடன் மாலி குடியரசுத் தலைவர் Ibrahim Boubacar Keïta  

மாலி குடியரசுத் தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

மாலி குடியரசுத் தலைவர் Ibrahim Boubacar Keïta அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 13, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாலி குடியரசுத் தலைவர் Ibrahim Boubacar Keïta அவர்கள், அந்நாட்டு அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 13, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும், மாலி குடியரசுத் தலைவர் Keïta அவர்கள் சந்தித்தார்.

மாலி குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அடிப்படைவாதம், தீவிரவாதம் என்ற போக்குகளால், உலகின் பல பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற நிலை, மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவை குறித்தும், இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், 2016ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் முதுபெரும் தந்தை கிரில் அவர்களும், கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சந்தித்ததன் நான்காம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் வெளியுறவு துறையின் தலைவர், முதுபெரும் தந்தை Hilarion அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில், இவ்வியாழனன்று சந்தித்தார்.

அத்துடன், தங்கள் ‘அத்லிமினா’ சந்திப்பையொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு வந்திருக்கும் ஆயர்களின் 14வது குழுவைச் சேர்ந்த ஆயர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2020, 14:40