தேடுதல்

Vatican News
இஸ்பெயின் தலைநகரில் கிறிஸ்தவர்கள் இஸ்பெயின் தலைநகரில் கிறிஸ்தவர்கள்  (ANSA)

நற்செய்தியின் குரலை எதிரொலிக்கச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்கள் நற்செய்தி வாழ்விற்குச் சான்று பகர்கையில், தெருக்களில் நடப்பதற்கும், மக்களின் காயங்களைத் தொடுவதற்கும், ஒருபோதும் அஞ்ச வேண்டாம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தூதுரைப் பணியாற்ற வேண்டுமென நம் ஆண்டவர் விடுத்த ஆணையை ஏற்று, பொதுநிலை கிறிஸ்தவர்கள், உலகில் நற்செய்தியின் குரல் எதிரொலிக்கச் செய்ய  வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பெயின் கத்தோலிக்கருக்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

இஸ்பெயினில் கத்தோலிக்க நற்பணி கழகம் அங்கீகரிக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,  “இறைமக்கள் எங்கும் சென்று..(Pueblo de Dios En Salida)” என்ற தலைப்பில், திருஅவையில் பொதுநிலையினரின் பங்கு பற்றி இஸ்பானிய ஆயர்கள் பேரவை நடத்துகின்ற கருத்தரங்கிற்கு, பிப்ரவரி 14, இவ்வெள்ளியன்று செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் நற்செய்தி வாழ்விற்குச் சான்று பகர்கையில், தெருக்களில் நடப்பதற்கும், மக்களின் காயங்களைத் தொடுவதற்கும், ஒருபோதும் அஞ்ச வேண்டாம் என்று ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, இக்கருத்தரங்கிற்கென நடைபெற்ற நீண்டகாலத் தயாரிப்புகளுக்கு தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியை இஸ்பானிய ஆயர்கள் பேரவை தலைவர் கர்தினால் Ricardo Blazquez Pérez அவர்களுக்கு அனுப்பிய செய்தியில், ஐரோப்பாவின் பாதுகாவலர்களாகிய புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் திருவிழாவன்று இக்கருத்தரங்கு ஆரம்பமாகியுள்ளது மிகவும் முக்கியமானது என்றும், இப்புனிதர்கள், நற்செய்தியை அறியாதவர்களுக்கு, அதனை அறிவித்தனர் என்றும், அக்காலத்திய மக்களுக்கு அதனைப் புரிந்துகொள்ளும் முறையில் போதித்து அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்தனர் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.  

மத்ரித் நகரில் பிப்ரவரி 14, இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இக்கருத்தரங்கு, பிப்ரவரி 16, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். இக்கருத்தரங்கிற்குத் தயாரிப்பாக, இளைஞர்கள், குடும்பங்கள், இயக்கங்கள், வேதியர்கள், ஆசிரியர்கள், போன்ற பலருக்கு கேள்விகள் அனுப்பப்பட்டு பரிந்துரைகளும் வரவேற்கப்பட்டன.

14 February 2020, 14:51