தேடுதல்

சிரியாவில் போர் சிரியாவில் போர் 

சிரியா, சீனாவுக்காக அனைவரும் செபிக்க அழைப்பு

சிரியா நாடு, பல ஆண்டுகளாக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்நாட்டிற்காக செபிப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு மலைப்பொழிவில் எடுத்துரைத்த எட்டு பேறுகளில், இரண்டாவது பேறான, “துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்” என்பது குறித்து மறைக்கல்வியுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், சிரியா மற்றும், சீனாவுக்காக எல்லாரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார். பல்வேறு வகைகளில் துயர்களை அனுபவிக்கும் அன்பு நிறைந்த சிரியா நாட்டிற்காகச் செபிப்போம். பல குடும்பங்கள், பல வயது முதிர்ந்தோர், மற்றும், குழந்தைகள் தங்கள் சொந்த இடங்களை விட்டு போரின் காரணமாக வேறு இடங்களுக்கு தப்பியோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிரியா நாடு, பல ஆண்டுகளாக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது. அந்நாட்டிற்காக செபிப்போம். சீனாவிற்காகவும் செபிப்போம். கொடிய நோயால் துன்பங்களை அனுபவிக்கும் நம் சீனா நாட்டு சகோதரர் சகோதரிகளுக்காக செபிப்போம். விரைவில் குணம்பெறுவதற்குரிய வழிகள் கண்டுகொள்ளப்பட வேண்டும் என நம் செபங்களை எழுப்புவோம் என்று திருத்தந்தை கூறினார்.

இதற்கிடையே, சிரியாவின் இத்லிப் மாநிலத்தில், இரஷ்யாவின் ஆதரவுடன் சிரியா நாட்டு இராணுவம் நடத்திவரும் தாக்குதல்களால் ஏறத்தாழ பத்து இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளவேளை, இத்தாக்குதல்கள் குறித்து விவாதிப்பதற்கென, தன் பிரதிநிதிகள் குழுவை மாஸ்கோவிற்கு அனுப்புவதாக, துருக்கி நாடு, இப்புதனன்று அறிவித்துள்ளது.      

இத்லிப் பகுதியிலிருந்து வெளியேறும் சிரியா மக்களுக்கு உதவும் துருக்கி நாட்டின் திட்டத்திற்கு ஆதரவாக, ஜெர்மனி, நான்கு கோடி யூரோக்களை துருக்கிற்கு வழங்கியுள்ளது என்று, துருக்கி வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.  

சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போரில், கடந்த பத்து வாரங்களில் அதிக மக்கள் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளனர். நிறைய மக்கள் தஞ்சம் தேடியிருக்கும் இத்லிப் நகரில் தாக்குதல்கள் தொடர்ந்தால், அப்பகுதி கல்லறை பகுதியாக மாறும் என்று, ஐ.நா. எச்சரித்துள்ளது. மேலும், புரட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் துருக்கி நாடு, சிரியாவிலிருந்து மேலும் மக்கள் புலம்பெயர்வார்கள் என்று அஞ்சுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 February 2020, 13:05