தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 120220 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 120220  (Vatican Media)

மறைக்கல்வியுரை: துயருறுவோர் பேறுபெற்றோர்

நாம் நம் பாவங்களுக்காக மனம் வருந்தும் அருளுக்காகவும், தூய ஆவியாரின் குணமளிக்கும் அருளுக்கு நம்மைத் திறந்தவர்களாகச் செயல்படுவதற்காகவும், தேவைப்படும் வரத்தை நமக்கு அருளும்படி செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு தன் மலைப்பொழிவில் முதலில் எடுத்துரைத்த எட்டு பேறுகளை விளக்கும் மறைக்கல்வித் தொடர் ஒன்றை தன் மறைக்கல்வி உரையில் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், ‘துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்’ (மத்.5,4), என்பது குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிய, முதலில்  செக்கரியா நூலிலிருந்து,

‘நான் தாவீது குடும்பத்தார்மேலும், எருசலேமில் குடியிருப்போர்மேலும் இரக்க உள்ளத்தையும் மன்றாடும் மனநிலையையும் பொழிந்தருள்வேன். அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனையே உற்றுநோக்குவார்கள்; அவனை உற்று நோக்கி ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து ஓலமிட்டு அழுபவரைப் போலும், இறந்துபோன தம் தலைப் பிள்ளைக்காகக் கதறி அழுபவர் போலும் மனம் கசந்து அழுவார்கள்’(செக்.12,10) என்ற பகுதி வாசிக்கப்பட்டபின் திருத்தந்தையின் உரை தொடர்ந்தது.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதர சகோதரிகளே, நற்பேறுகள் குறித்த நம் மறைக்கல்வித்தொடரில் இன்று, எட்டு பேறுகளுள்  இரண்டாவது பேறான, “துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்” என்பது குறித்து நோக்குவோம். இங்கு, 'துயர்’ என்று இயேசு குறிப்பிடுவதை விவரிக்க வந்த, அக்கால பாலைவனவாழ் கிறிஸ்தவ துறவிகள், ‘penthos’ என்ற வார்த்தையை பயன்படுத்தினர். ‘penthos’ என்ற பதம், துயர் என்பதைத் தாண்டி, இறைவனுடனும், நம் ஒவ்வொருவர் இடையேயும் ஆழமான ஓர் உறவை உருவாக்கவல்ல ஓர் உள்மன துயர்நிலையை குறிப்பிடுவதாக உள்ளது. இத்தகைய இருவகை துயர் நிலைகள் குறித்து விவிலியம் விவரிக்கின்றது. முதல்வகை, நம் சகோதர்களோ, சகோதரிகளோ மரணமடையும்போது, அல்லது, வேதனைகளை அனுபவிக்கும்போது நாம் நமக்குள் உணரும் வலி. இரண்டாவது வகை, நம் பாவங்களுக்காக நாம் மனம் வருந்தி துக்கம் கொள்வது. இரண்டுமே பிறர்மீது நாம் கொண்டிருக்கும் அன்புடன்கூடிய அக்கறையில் தன் அடிப்படையைக் கொண்டுள்ளன. அதிலும், அனைத்திற்கும் மேலாக, இறைவன் மீதுள்ள நம் அன்பில் ஊறிப்போனவைகளாக உள்ளன இவை. தான் இயேசுவை மறுதலித்தபின் கண்ணீர் சிந்தி அழுத புனித பேதுருவைப்போல், பாவங்களுக்காக மனம் வருந்தி துயருறுவது என்பது, நமக்கு ஆறுதலை வழங்கும் தூய ஆவியாரின் கொடையாகும். நாம் நம் பாவங்களுக்காக மனம் வருந்தும் அருளுக்காகவும், தூய ஆவியாரின் குணமளிக்கும் அருளுக்கு நம்மைத் திறந்தவர்களாகச் செயல்படுவதற்காகவும், தேவைப்படும் வரத்தை நமக்கு அருளும்படி செபிப்போம். இதன் வழியாக நாம் பெற்ற ஆறுதலின் துணைகொண்டு, மற்றவர்களுக்கும் நாம் ஆறுதலை வழங்க முடியும்.

தன் புதன் மறைக்கல்வி உரையை இவ்வாறு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியா மற்றும் சீனாவுக்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார். இந்த செப விண்ணப்பத்திற்குப்பின், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

12 February 2020, 13:02