தேடுதல்

Vatican News
உரோம் மாநகராட்சி இல்லமான Campidoglioவுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் 2019ம் ஆண்டு சென்ற நிகழ்வு - கோப்புப் படம் உரோம் மாநகராட்சி இல்லமான Campidoglioவுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் 2019ம் ஆண்டு சென்ற நிகழ்வு - கோப்புப் படம் 

உடன்பிறந்தநிலை, அமைதியின் இடமாக உரோம் அமைவதாக

சிறந்த வாழ்வைத் தேடி உரோம் நகருக்கு வருகின்ற மக்களின் கண்கள் வழியாக தங்கள் நகரைப் பார்க்க வேண்டும் என்று, குடிமக்களையும், அரசியல்வாதிகளையும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரை ஒருமைப்பாடு, உடன்பிறந்த உணர்வு, மற்றும், அமைதியின் இடமாக அமைக்குமாறு, அந்நகர் வாழ் மக்கள் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலி நாட்டின் தலைநகரமாக உரோம் நகர் அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவு விழாவுக்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகர், இத்தாலியின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது, இறைவனின் திட்டம் என்றும், இது, அச்சமயத்தில் நிலவிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்றும் கூறியுள்ளார்.

பிப்ரவரி 3, இத்திங்கள் மாலையில், உரோம் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கலந்துகொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை வாசித்தார்.

இன்ப, துன்பங்களை திருஅவை

கடந்த 150 ஆண்டுகளில், உரோம் நகர் மாபெரும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டுள்ளது, உரோம் மக்களின் இன்பங்கள் மற்றும், சோதனைகளில் திருஅவையும் பகிர்ந்துகொண்டது என்று, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, திருஅவையும், உரோம் நகரமும், ஒருவர் ஒருவரில் எவ்வாறு நல்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை,1943க்கும், 1944ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒன்பது மாதங்களில் நாத்சி அரசு, உரோம் நகரை ஆக்ரமித்திருந்தபோது, உரோம் நகரின் ஆயிரத்திற்கு அதிகமான யூதர்கள் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர் என்பதை முதல் நிகழ்வாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாத்சிகளிடம் அகப்படும் ஆபத்துக்களிலிருந்து பலரை திருஅவை காப்பாற்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செயலால், யூத மற்றும், கத்தோலிக்க சமுதாயங்களுக்கு இடையே, நீண்டகாலமாக நிலவிய தடுப்புகளும், வேதனைகளும் அகன்றன என்றும், அந்த இன்னல்நிறைந்த காலத்திலிருந்து, எல்லாவற்றிற்கும் மேலாக, இவ்விரு சமுதாயங்களுக்கு இடையே ஓர் அழியாத உடன்பிறந்தநிலை பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம் என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

உரோம் அனைவருக்கும் ஓர் இல்லம்

1962ம் ஆண்டுக்கும், 1965ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடைபெற்றபோது, உரோம் நகரம் நூற்றுக்கணக்கான பொதுச்சங்கத் தந்தையர், பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பார்வையாளர்கள் மற்றும், வல்லுனர்களை வரவேற்றது, அச்சமயம், அது தனது, உலகளாவிய, கத்தோலிக்க மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பின் இடமாக ஒளிர்ந்தது என்றும், திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

மூன்றாவதாக, உரோம் நகரைத் தாக்கியிருக்கும் தீமைகளை அகற்றுவதற்கென, உரோம் மறைமாவட்டம் 1974ம் ஆண்டு பிப்ரவரியில் நடத்திய கருத்தரங்கு என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அக்கருத்தரங்கில் பங்குகொண்டவர்கள், ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு திருஅவை, உதவுவதற்கு வழிகளைத் தேடினர் என்று கூறியுள்ளார்.

உரோம் நகரம், அனைவருக்கும் ஓர் இல்லமாக அமைய வேண்டும், சிறந்த வாழ்வைத் தேடி இந்நகருக்கு வருகின்ற மக்களின் கண்கள் வழியாக தங்கள் நகரைப் பார்க்க வேண்டும் என்று, குடிமக்களையும், அரசியல்வாதிகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

1871ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி, உரோம் நகர் இத்தாலியின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இந்த 150ம் ஆண்டு நிறைவு நிகழ்வில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா மற்றும் ஏனைய முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

04 February 2020, 15:17