தேடுதல்

Focolare கத்தோலிக்க இயக்கத்தின் நிறுவனர், இறையடியார் கியாரா லூபிக் Focolare கத்தோலிக்க இயக்கத்தின் நிறுவனர், இறையடியார் கியாரா லூபிக் 

கியாரா லூபிக் நூறாம் ஆண்டையொட்டி திருத்தந்தையின் செய்தி

திருஅவையில், தலைமைத்துவப் பணியை ஏற்றிருக்கும் ஆயர்கள், அதனோடு, ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்காக ஆற்றும் பணியில், இரக்கத்தால் வழிநடத்தப்படுவது இன்றியமையாதது - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒன்றிப்பு என்ற தனிவரம், நம் காலத்திற்கென வழங்கப்பட்டுள்ள அருள் என்று, இத்தாலியின் திரிதெந்து (Trent) நகரில் நடைபெற்ற அனைத்துலகக் கூட்டம் ஒன்றுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

Focolare கத்தோலிக்க இயக்கத்தின் நிறுவனர், இறையடியார் கியாரா லூபிக் (Chiara Lubich) அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டையொட்டி, 50 நாடுகளைச் சேர்ந்த 7 கர்தினால்கள், மற்றும் 137 ஆயர்கள், சனவரி 8.9 ஆகிய நாள்கள், திரிதெந்து நகரில், மேற்கொண்ட கூட்டத்திற்கு, திருத்தந்தை, இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

பாங்காக் பேராயர் கர்தினால் Francis Xavier Kriengsak Kovithavanij அவர்கள் வாசித்தளித்த திருத்தந்தையின் செய்தியில், தனிவரங்கள், தூய ஆவியாரின் கொடைகளாக இருப்பதால், தூய ஆவியாரின் பள்ளியில் எப்போதும் இணைந்திருப்பது, ஆயர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

திருஅவையில், தலைமைத்துவப் பணியை ஏற்றிருக்கும் ஆயர்கள், அதனோடு, ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்காக ஆற்றும் பணியில், இரக்கத்தால் வழிநடத்தப்படுவது இன்றியமையாதது என்று, தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைத்துவப் பணியும், அக்கறை உணர்வும், ஒன்றிணைந்து செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலுவையில் அறையப்பட்டுள்ள இயேசுவை, நம் திசைக்காட்டும் கருவியாகக் கொண்டு, ஏழைகளுக்கும், துன்புறுவோருக்கும் ஒளி, மகிழ்வு, மற்றும் அமைதியைக் கொணரும் பணியிலிருந்து நாம் துவங்கவேண்டும் என்ற அழைப்பையும், திருத்தந்தை, தன் செய்தியில் விடுத்துள்ளார்.

1920ம் ஆண்டு சனவரி 22ம் தேதி இத்தாலியின் திரிதெந்து நகரில் பிறந்து, 2008ம் ஆண்டு இறையடி சேர்ந்த, Focolare இயக்கத்தின் நிறுவனர், இறையடியார் கியாரா லூபிக் அவர்களது பிறப்பின் 100வது ஆண்டு, தற்போது, அந்நகரில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2020, 15:00