தேடுதல்

Vatican News
திருத்தந்தை ஜான் பால் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை ஜான் பால் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ் 

புனித திருத்தந்தை 2ம் ஜான் பாலிடமிருந்து கற்றுக்கொண்டேன்

2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு சனவரி மாதம் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அருள்பணி எப்பிகோக்கோ அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல்வேறு உரையாடல்களின் விளைவாக, "San Giovanni Paolo Magno" நூல் உருவாக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மகிழ்வு மற்றும், இரக்கத்தின் முக்கியத்துவத்தை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டதாகவும், இவையிரண்டும் அருள்பணித்துவ வாழ்வை அமைதியாக ஆற்றுவதற்கு உதவுபவை எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய நூலில் தெரிவித்துள்ளார்.

"San Giovanni Paolo Magno" அதாவது "பெரிய புனித ஜான்பால்" என்ற தலைப்பில், பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று இத்தாலிய மொழியில் வெளியான இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தன்னைப் பற்றியும், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பதிவாகியுள்ளன.

உயிர்த்த கிறிஸ்துவைச் சந்திப்பதில் கிடைக்கும் மிக முக்கியமான உணர்வு மகிழ்வு என்றும், மகிழ்வையும், இரக்கத்தையும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

புனித வியாழன் பற்றி தான் எழுதிய மடல்கள் மற்றும், புவனோஸ் அய்ரெஸ் நகரில் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய சில மறையுரைகளை வாசித்தாலே, அருள்பணித்துவ வாழ்வு பற்றிய, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் எண்ணங்கள் ஒத்திருப்பதைக் காண முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய அருள்பணியாளர் லுயீஜி மரிய எப்பிகோக்கோ (Luigi Maria Epicoco) என்பவருடன் இணைந்து, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்த தன் கருத்துக்களை, "San Giovanni Paolo Magno" என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.

மேலும், போலந்து நாட்டு புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தனது 50வது அருள்பணித்துவ பொன் விழாவுக்கென, கொடையும், பேருண்மையும் என்ற தலைப்பில் எழுதிய மடலிலிருந்து பல கூற்றுகள், இந்நூலின் ஒரு பிரிவில் இடம்பெற்றுள்ளன என்று, 39 வயது நிரம்பிய, அருள்பணி எப்பிகோக்கோ அவர்கள் கூறியுள்ளார்.

1920ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பிறந்த புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களது பிறப்பின் முதல் நூற்றாண்டு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, இவ்வாண்டு, பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று, இந்நூல் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டது.

14 February 2020, 14:59