தேடுதல்

Vatican News
குரோவேசியப் பிரதமரும்  திருத்தந்தையும் குரோவேசியப் பிரதமரும் திருத்தந்தையும்   (Vatican Media)

திருத்தந்தையைச் சந்தித்த குரோவேசியப் பிரதமர் Andrej Plenković

ஐரோப்பிய ஒன்றிய அவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவை விடுக்கும் சவால்கள், போஸ்னியா, ஹெர்சகொவினா நாடுகளில் வாழும் குரோவேசிய மக்கள் ஆகியவை குறித்து குரோவேசியப் பிரதமரும், திருத்தந்தையும் கலந்துரையாடினர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குரோவேசியாவின் பிரதமர், Andrej Plenković அவர்கள், தன்னுடன் வந்திருந்த அரசு அதிகாரிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பிப்ரவரி 6, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

குரோவேசியக் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்த நிறைவானச் சூழலைக் குறித்து, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய அவையின் தலைமைப் பொறுப்பை குரோவேசிய அரசு 2020ம் ஆண்டில் ஏற்றுள்ளதால், தற்போது, ஐரோப்பிய ஒன்றிய அவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், அவை விடுக்கும் சவால்களும், போஸ்னியா, ஹெர்சகொவினா நாடுகளில் வாழும் குரோவேசிய மக்கள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பைத் தொடர்ந்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும், குரெவேசியப் பிரதமர், Andrej Plenković அவர்கள் சந்தித்தார்.

குரோவேசியாவின் பிரதமருடன் நிகழ்ந்த இச்சந்திப்பைத் தொடர்ந்து, விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் பிரான்சிஸ்க்கோ இலதாரியா அவர்களையும், தாய்லாந்து நாட்டின் கர்தினால் Francis Xavier Kovithavanij அவர்களையும், இன்னும் சில திருஅவை அதிகாரிகளையும், இவ்வியாழனன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

06 February 2020, 15:01