தேடுதல்

Vatican News
மத்திய தரைக்கடல் நாடுகளின் ஆயர்களுடன் திருத்தந்தை மத்திய தரைக்கடல் நாடுகளின் ஆயர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

மத்தியத்தரைக்கடல் பகுதி ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை

மனித, மற்றும் பொருளாதார உறவுகளைக் கட்டியெழுப்புவதை விடுத்து, வீடுகள், பாலங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அழிப்பதையும், மக்களைக் கொல்வதையும் தொடர்வது, மதியற்ற செயல் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

“மத்தியத்தரைக்கடல் பகுதி, அமைதியின் எல்லை” என்ற தலைப்பில், இத்தாலியின் பாரி நகரில், மத்தியத்தரைக்கடல் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் பணியாற்றும் ஆயர்கள் கலந்துகொண்ட 4 நாள் கூட்டத்தின் இறுதி நாளான ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாரி நகருக்குச் சென்று, ஆயர்களுக்கு உரை வழங்கினார்.

இத்தாலியின் தெற்கே, ஏட்ரியாடிக் கடற்கரையில் அமைந்துள்ள பாரி நகரின் புனித நிக்கோலஸ் பேராலயத்தில், இத்தாலிய ஆயர்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 58 ஆயர்களை, திருத்தந்தை சந்தித்து உரை வழங்கினார்.

முறிந்த உறவுகளை சீராக்கவும், வன்முறையால் அழிவுற்ற நகர்களை மீண்டும் கட்டியெழுப்பவும், பாலைவனமாக மாறியுள்ள இடங்களில் பூந்தோட்டங்களை வளர்க்கவும், நம்பிக்கையிழந்துள்ள இடங்களில், நம்பிக்கையை உருவாக்கவும், மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கவும், ஆயர்கள் உழைக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் விண்ணப்பித்தார்.

பொருளாதார, மத, மற்றும் அரசியல் அடிப்படையில், மோதல்கள் இடம்பெறும் இடங்களில், ஒன்றிப்பு மற்றும் அமைதியின் சாட்சிகளாக செயல்படவேண்டிய ஆயர்களின் கடமையை நினைவுறுத்தியத் திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பது, அமைதியை உருவாக்குபவர்களாக நாம் உழைப்பதை வலியுறுத்துகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மனித, மற்றும் பொருளாதார உறவுகளைக் கட்டியெழுப்புவதை விடுத்து, வீடுகள், பாலங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அழிப்பதையும், மக்களைக் கொல்வதையும் தொடர்வது, மதியற்ற செயல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

அமைதியைக் குறித்து பேசியபடி, ஆயுதங்களை விற்போரைக் குறித்து குற்றம் சாட்டியத் திருத்தந்தை, குடியேற்றத்தாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்து, திருஅவைக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நிலவவேண்டிய ஒத்துழைப்பைக் குறித்தும் தன் உரையில் குறிப்பிட்டார்.

24 February 2020, 15:56