தேடுதல்

Vatican News
திருநீற்றுப் புதன் திருவழிபாட்டின்போது திருத்தந்தை (கோப்பு படம் -.2018 ) திருநீற்றுப் புதன் திருவழிபாட்டின்போது திருத்தந்தை (கோப்பு படம் -.2018 ) 

உரோம் அவெந்தினோ குன்றில் திருநீற்றுப்புதன் திருவழிபாடு

தொமினிக்கன் துறவு சபையினரின் அன்னை ஆலயமாக விளங்கும் புனித சபினா பெருங்கோவில், உரோம் மாநகரிலுள்ள பழைய ஆலயமாகும். இது, பழங்கால பேரரசர்கள் வீடுகள் அமைந்துள்ள பகுதியில் எழுப்பப்பட்டது. இவ்வீடுகளில் ஒன்று சபினாவுடையது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பிப்ரவரி 26, இப்புதனன்று தொடங்கும் திருநீற்றுப் புதன் திருவழிபாடுகளை, உரோம் நகரின் ஏழு குன்றுகளில் ஒன்றான, அவெந்தினோ குன்றில் (colle aventino) நிறைவேற்றுவார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

புனித வாரத்திற்குத் தயாரிக்கும் காலமான தவக்காலத்தின் தொடக்கமாக நிகழும் திருநீற்றுப் புதன் திருவழிபாடுகளை, பிப்ரவரி 26, இப்புதன் மாலை 4.30 மணிக்கு, அவந்தினோ குன்றிலுள்ள புனித ஆன்செல்ம், புனித சபினா ஆகிய இரு பெருங்கோவில்களில் தொடங்குவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் மாலை 4.30 மணிக்கு, புனித ஆன்செல்ம் பெருங்கோவிலிலிருந்து பவனியாகச் சென்று, புனித சபினா பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிப்ரவரி 27, இவ்வியாழன் காலை 10.20 மணிக்கு, உரோம் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில் சென்று, உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு, பாவமன்னிப்பு திருவழிபாடு நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில அருள்பணியாளர்களுக்கு ஒப்புரவு அருளடையாளத்தையும் நிறைவேற்றுவார்.

இந்த வழிபாட்டில், உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் ஆஞ்சலோ தெ தொனத்திஸ் அவர்கள் தியானச் சிந்தனைகளை முதலில் வழங்குவார். பின்னர் அருள்பணியாளர்கள், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவார்கள். இவ்வழிபாட்டின் இறுதி நிகழ்வாக, திருத்தந்தையும் தவக்காலம் குறித்த சிந்தனைகளை வழங்குவார்.

புனித சபினா

தொமினிக்கன் துறவு சபையினரின் அன்னை ஆலயமாக விளங்கும் புனித சபினா பெருங்கோவில், உரோம் மாநகரிலுள்ள பழைய ஆலயமாகும். இது, கி.பி. 422 மற்றும், 432ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், Illyria நகர் அருள்பணி பீட்டர் என்பவரால்,  பழங்கால பேரரசர்கள் வீடுகள் அமைந்துள்ள பகுதியில் எழுப்பப்பட்டது. அவ்வீடுகளில் ஒன்று சபினாவுடையது. தனது பணிப்பெண் செராஃபியா என்பவரால் கிறிஸ்தவத்தைத் தழுவிய சபினா, கிறிஸ்தவர் என்ற காரணத்தால், பேரரசர்கள் வெஸ்பாசியன் அல்லது Hadrian ஆட்சியில் தலைவெட்டப்பட்டு உயிரிழந்தார். இவரது பணிப்பெண்ணும் கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டார். 1287ம் ஆண்டில் இந்த ஆலயத்தில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை துவங்கியது. ஆயினும், அந்த அவையில் பங்குகொண்டவர்களில் ஆறு பேர் கொள்ளை நோயால் உயிரிழந்ததால் அங்கிருந்து அனைவரும் வெளியேறினர். எனினும், 1288ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் அந்த ஆலயத்தில் கான்கிளேவ் அவை கூடி, திருத்தந்தை 4ம் நிக்கொலாஸ் அவர்களை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தது. 

25 February 2020, 14:56