தேடுதல்

Vatican News
செயற்கை நுண்ணறிவு குறித்து Brussels நகரில் நடைபெற்ற கருத்தரங்கு - கோப்புப் படம் செயற்கை நுண்ணறிவு குறித்து Brussels நகரில் நடைபெற்ற கருத்தரங்கு - கோப்புப் படம்  (REUTERS)

திருஅவையின் சமுதாயப் போதனைகளும், கணனி கணக்கீட்டு முறைகளும்

டிஜிட்டல் உலகம், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத்திறன், நாம் அனுபவிக்கும் உலகளாவிய மாற்றத்தின் முக்கிய மையமாக உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“கணக்கீட்டுமுறைகளில் குறிப்பாக, கணினியில், பிரச்சனைகளைத் தீர்ப்பது நல்லதா? செயற்கை நுண்ணறிவு : அறநெறிகள், சட்டம், நலவாழ்வு” என்ற தலைப்பில், பிப்ரவரி 26, இப்புதன் முதல், பிப்ரவரி 28, இவ்வெள்ளி வரை, வத்திக்கானில், திருத்தந்தை வாழ்வுக் கழகம் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று ஒரு செய்தியை அனுப்பினார்.

தற்போது உலகில் புதிதாக வளர்ந்துள்ள, கணக்கீட்டுமுறைகளின் வளர்ச்சிகள், திருஅவையின் சமுதாயப் போதனைகளின் அடிப்படையில், அதாவது, மனிதரின் மாண்பு, நீதி, ஒருமைப்பாடு போன்ற கோட்பாடுகளின்படி இடம்பெற வேண்டும் என்று திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

இன்றைய உலகைப் பாதிக்கின்ற மிக முக்கிய மாற்றங்களில் ஒன்று குறித்து,  இக்கருத்தரங்கில் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று பாராட்டியுள்ள திருத்தந்தை, டிஜிட்டல் உலகம், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத்திறன், நாம் அனுபவிக்கும் உலகளாவிய மாற்றத்தின் முக்கிய மையமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

டிஜிட்டல் உலகில் இடம்பெறும் வியப்புக்குரிய காரியங்கள், நம் தனிப்பட்ட மற்றும் சமுதாய வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஊடுருவியுள்ளன என்றும், அவை, உலகையும், நம்மையும் புரிந்துகொள்ளும் முறையையும் பாதித்துள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 28, இவ்வெள்ளியன்று, இப்பிரதிநிதிகளை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திருத்தந்தையின் உடல்நிலை காரணமாக இவர்களை அன்று சந்திக்கவில்லை. மாறாக, அவர்களுக்கென தான் தயாரித்து வைத்திருந்த செய்தியை திருத்தந்தை அவர்களுக்கு அனுப்பினார்.

29 February 2020, 14:56