தேடுதல்

Vatican News
திருப்பீடத்திற்கு உதவும் இத்தாலிய காவல்துறையினர் சந்திப்பு திருப்பீடத்திற்கு உதவும் இத்தாலிய காவல்துறையினர் சந்திப்பு  (Vatican Media)

திருப்பீடத்திற்கு இத்தாலிய காவல்துறையின் நற்பணிகள்

வத்திக்கான் பகுதிகளில் பொதுப் பாதுகாப்புப்பணியாற்றும் காவல்துறையினர், எப்போதும் விழிப்புடன், காலம்அறிந்து செயல்படுபவர்களாய், மிகுந்த கவனத்துடன் இருப்பதை நானே நேரில் பார்த்திருக்கிறேன், இதற்காக நெஞ்சார்ந்த நன்றி சொல்கிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் பகுதிகளில் பொதுப் பாதுகாப்புப் பணியாற்றும் காவல்துறையினருக்குத் தன் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்காவல்துறையினரை, பிப்ரவரி 08, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்திற்கும், வத்திக்கான் நாட்டிற்கும், இவர்கள் ஆற்றிவரும் பணி, தனிச்சிறப்பையும், மதிப்பையும் கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலையும், புனித பேதுரு வளாகத்தையும், வத்திக்கான் அருங்காட்சியகத்தையும் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும், திருப்பயணிகளோடு தொடர்புகொள்வது எளிதான காரியம் அல்ல என்று கூறியத் திருத்தந்தை, தான் உரோம் மற்றும், இத்தாலியில் மேய்ப்புப்பணி பயணங்களை மேற்கொள்ளும் நேரங்களிலும், இவர்களின் பணி முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

பணியில் திறமையை வெளிப்படுத்துவதோடு, திருப்பீடத்துடன் உண்மையான அன்பையும், விசுவாசத்தையும் இக்காவல்துறையினர் வெளிப்படுத்துகின்றனர் என்றும்,  வத்திக்கான் காவல்துறையினருடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருவது, இவர்களின் பணியை மேலும் மதிப்புமிக்கதாய் ஆக்குகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

சிலவேளைகளில் நெருக்கடிகளையும் எதிர்நோக்கும் இவர்களின் பணி, நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும், பிறரன்புச் சுடர்களால் எப்போதும் வழிநடத்தப்படும் என்ற தன் நம்பிக்கையை தெரிவித்துள்ள திருத்தந்தை, இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும் தன் செபங்களையும், நன்றியையும், ஆசீரையும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

08 February 2020, 15:31