தேடுதல்

Vatican News
போரால் பாதிக்கப்பட்டு குடிபெயரும் சிரியா குழந்தைகள் போரால் பாதிக்கப்பட்டு குடிபெயரும் சிரியா குழந்தைகள்  (AFP or licensors)

சிரியாவில் உயிரிழந்த குழந்தை – திருத்தந்தை கவலை

சிரியாவின் புலம்பெயர்ந்தோர் முகாமில், குளிரில் நடுங்கிய 18 மாத குழந்தை, போரின் விளைவாக, போதிய மருத்துவ வசதி இன்மையால் உயிரிழந்தது பற்றி திருத்தந்தை குறிப்பிட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இதயத்தில் பிறக்கும் பகைமையே போருக்கும் நம்மை இட்டுச்செல்கிறது என தன் மூவேளை செபஉரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வெள்ளியன்று சிரியாவின் Afrin நகரில், மருத்துவ உதவியின்றி, ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

உள்ளத்தின் தீமைகளால் உருவாகும் போர்களின் விளைவுகள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குளிரில் நடுங்கிய இந்தக் குழந்தை, போரின் விளைவாக, போதிய மருத்துவ வசதி இன்மையால் உயிரிழந்தது பற்றி குறிப்பிட்டார்.

சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டுப் போரால் குடிபெயர்ந்துள்ள பல ஆயிரக்கணக்கான குழந்தைகளுள் ஒன்றான Iman Ahmed Laila என்ற 18 மாத குழந்தை, கடந்த வெள்ளியன்று, சிரியாவின் வடமேற்கு நகரமான Afrinல் உயிரிழந்துள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கென உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் வாழ்ந்து வந்த இக்குழந்தை, கடுங்குளிரை தாங்கமுடியாமல் துவண்ட நிலையில், Al-Shifa நலவாழ்வு மையத்தை அடையும் முன்னர், தன் தந்தையின் கரங்களிலேயே உயிரிழந்தது.

போரால் சிரியாவிற்குள்ளேயே 62 இலட்சம் பேர் புலம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றனர், இதில் 25 இலட்சம் பேர் சிறார்.

17 February 2020, 15:24