தேடுதல்

Vatican News
புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் மூவேளை செப உரை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் மூவேளை செப உரை  (AFP or licensors)

நற்செயல்கள் வழியே, உலக இருளை அகற்ற அழைப்பு

இஞ்ஞாயிறு நற்செய்தியில், உப்பு, ஒளி ஆகிய உருவகங்களைப் பயன்படுத்தி இயேசு வழங்கிய உரையை மையப்படுத்தி, திருத்தந்தை, நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகம், சிலவேளைகளில், மோதல்களிலும், பாவத்திலும் உழன்றாலும், நம் இன்றைய வாழ்வை ஏற்று நடத்துவதில் நாம் எவ்வகையிலும் அஞ்சாமல், உப்பாகவும், ஒளியாகவும் சாட்சிய வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என்று, இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தியில், உப்பு, ஒளி ஆகிய உருவகங்களைப் பயன்படுத்தி இயேசு வழங்கிய உரையை மையப்படுத்தி, திருத்தந்தை, நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார்.

உணவுக்கு சுவையூட்டுதல், உணவைப் பாதுகாத்தல் என்ற பணிகளை ஆற்றும் உப்பைப்போல, மக்களின் வாழ்வைக் கெடுக்கும் ஆபத்துக்களிலிருந்து அவர்களைக் காக்கும் செயல்களில் இயேசுவின் சீடர்கள் ஈடுபடவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழைப்பு விடுத்தார்.

பணம், பதவி, அதிகாரம் என்ற உலகப் போக்குகளில் தங்களையே இழந்துவிடாமல், நேர்மை, மற்றும் உடன்பிறந்த நிலை என்ற மதிப்பீடுகளுக்கு சாட்சிகளாக வாழ்ந்து, பாவத்தையும், நன்னெறி சீர்கேடுகளையும் எதிர்த்து நிற்கும் கடமை இயேசுவின் சீடர்களுக்கு உள்ளது என்று, திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தன்னையே முன்னிலைப்படுத்தாத உப்பைப்போல, சீடர்களும், பணிவுடன், மற்றவர்களுக்குப் பயன்தருபவர்களாக செயலாற்றவேண்டும் என்பதை, தன் மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருளை அகற்றி, நம் பார்வைக்கு உதவும் ஒளியைப்போல, நாமும், இயேசு என்ற ஒளியைக் கொண்டு, நம் நற்செயல்கள் வழியே, இருளை அகற்றவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

09 February 2020, 12:30