தேடுதல்

Vatican News
பிரேசில் ஆயர் பேரவையின் "உடன்பிறந்த நிலை கொள்கை பரப்பு முயற்சி" 2020 பிரேசில் ஆயர் பேரவையின் "உடன்பிறந்த நிலை கொள்கை பரப்பு முயற்சி" 2020 

பிரேசில் தலத்திருஅவைக்கு திருத்தந்தையின் செய்தி

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தவக்காலத்தின் முக்கிய குறிக்கோளான மனமாற்றத்தை, பிறர்நலப் பணிகளுடன், இணைத்து, பிரேசில் ஆயர் பேரவை மேற்கொண்டு வரும் முயற்சியைப் பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரின் உயிர்ப்பு என்ற பெரும் மறையுண்மையைக் கொண்டாடுவதற்கு, மனமாற்றம், மற்றும் இறைவேண்டுதல் ஆகிய தயாரிப்புக்களை மேற்கொள்ளும் சக்தி மிகுந்த தருணமான தவக்காலத்தை நாம் துவங்குகிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டு தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

பிரேசில் ஆயர்களின் 50 ஆண்டு தவக்கால முயற்சி

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தில், "உடன்பிறந்த நிலை கொள்கை பரப்பு முயற்சி" என்ற பெயரில், பிரேசில் ஆயர் பேரவை மேற்கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு நடத்தப்படும் கொள்கைப்பரப்பு செயல்பாடுகளுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தவக்காலத்தின் முக்கிய குறிக்கோளான மனமாற்றத்தை, பிறர்நலப் பணிகளுடன், குறிப்பாக, அதிகத் தேவையில் இருக்கும் மனிதர்களுக்கு ஆற்றும் பணிகளுடன் இணைத்து, பிரேசில் ஆயர் பேரவை மேற்கொண்டு வரும் இந்த முயற்சியை தான் பாராட்டுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்கள் மதிப்பு மிக்கவை

உயிர்கள் மதிப்பு மிக்கவை என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன், 2020ம் ஆண்டு தவக்காலத்திற்கென்று, பிரேசில் ஆயர்கள், இம்முயற்சியை ஏற்பாடு செய்திருப்பதை, திருத்தந்தை தன் செய்தியில் பாராட்டியுள்ளார்.

நல்ல சமாரியரின் (காண்க. லூக். 10,25-37) எடுத்துக்காட்டைப் பின்பற்றினால் மட்டுமே, உலகளாவிய அக்கறையற்ற மனநிலையை வெல்லமுடியும் என்பதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உவமையின் மையக்கருத்தைப் பின்பற்ற, தவக்காலம் மிகச் சிறந்த தருணம் என்று கூறியுள்ளார்.

புனித Dulce dos Pobres

மற்றவர்களின் துன்பங்களைக் காணும் நாம் அனைவரும் பரிவுடன் அத்துன்பங்களை அகற்ற முன்வரவேண்டும் என்பதை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தான் புனிதராக உயர்த்திய Dulce dos Pobres அவர்கள், நமக்குச் சொல்லித்தருகிறார் என்பதை, இச்செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இப்புனிதரின் பரிந்துரையால், பிரேசில் தலத்திருஅவை மேற்கொண்டுள்ள தவக்கால நடவடிக்கைகள் பயனளிக்கவேண்டுமென்ற வேண்டுதலுடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

26 February 2020, 14:58