தேடுதல்

Vatican News
பாஸ்கா கொண்டாட்டங்கள்  (புனித பேதுரு வளாகம் 2019) பாஸ்கா கொண்டாட்டங்கள் (புனித பேதுரு வளாகம் 2019)  (Vatican Media)

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் – திருத்தந்தையின் நிகழ்வுகள்

பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருவழிபாடுகள் நிகழ்வுகளின் விவரங்களை, திருப்பீடத்தின் திருவழிபாட்டுத் துறை வெளியிட்டது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருவழிபாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளின் விவரங்களை, திருப்பீடத்தின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான, அருள்பணி குய்தோ மரினி அவர்கள், பிப்ரவரி 12, இப்புதனன்று வெளியிட்டார்.

பிப்ரவரி, மார்ச் நிகழ்வுகள்

பிப்ரவரி 26, திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணிக்கு, உரோம் நகர், புனித அன்செல்ம் கோவிலிலும், அதைத் தொடர்ந்து, புனித சபீனா பெருங்கோவிலிலும், பாவ மன்னிப்பு திருப்பவனியையும், திருப்பலியையும் நிறைவேற்றும் திருத்தந்தை, மார்ச் 1ம் தேதி ஞாயிறன்று, அரிச்சா என்ற ஊரில், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுடன், ஆண்டு தியானத்தை மேற்கொள்வார்.

மார்ச் 06, வெள்ளியன்று ஆண்டு தியானத்தை முடித்து, வத்திக்கான் திரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச், 20 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், ஒப்புரவு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்.

ஏப்ரல் நிகழ்வுகள்

ஏப்ரல் 5ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று, காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், குருத்தோலை பவனி மற்றும் ஆண்டவரின் திருப்பாடுகள் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, ஏப்ரல் 9, புனித வியாழனன்று காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார்.

ஏப்ரல் 10 புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், ஆண்டவரின் திருப்பாடுகள் திருவழிபாட்டையும், அன்று இரவு 9.15 மணிக்கு, உரோம் நகரின் மையத்தில் அமைந்துள்ள கொலோசேயம் திடலில், சிலுவைப்பாதை பக்திமுயற்சியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமையேற்று நடத்துவார்.

ஏப்ரல் 11, புனித சனிக்கிழமையன்று இரவு 8.30 மணிக்கு, பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாடு, ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறு, காலை பத்து மணிக்கு, திருப்பலி  ஆகியவற்றை, புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நண்பகல் 12 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து, ஊருக்கும் உலகுக்கும் என்று பொருள்படும், ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி, மற்றும், சிறப்பு ஆசீர் ஆகியவற்றை வழங்குவார்.

13 February 2020, 14:47