தேடுதல்

Vatican News
புதிய நூல் -"பிரான்சிஸ். பெண்களின் திருத்தந்தை" புதிய நூல் -"பிரான்சிஸ். பெண்களின் திருத்தந்தை"  

"பிரான்சிஸ். பெண்களின் திருத்தந்தை" - புதிய நூல்

பெண்களை, அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்படுதல், பெண் தியாக்கோன்கள் என்ற தலைப்புக்களில் திருத்தந்தையிடம், பல்வேறு தருணங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் விளக்கங்கள் அடங்கிய புதிய நூல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் செய்தியாளராகப் பணியாற்றிவரும் Nina Fabrizio என்ற பெண்மணி, "பிரான்சிஸ். பெண்களின் திருத்தந்தை" என்ற பெயரில் உருவாக்கியுள்ள ஒரு நூலை, புனித பவுல் பதிப்பகம் வெளியிடவுள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் வெளியாகவிருக்கும் இந்நூலில், திருஅவையில் பெண்களின் பங்கு குறித்து திருத்தந்தை வெளியிட்டிருக்கும் பல்வேறு எண்ணங்கள் இடம்பெற்றுள்ளன.

பெண்களை, அருள்பணியாளர்களாக திருநிலைப்படுத்தப்படுதல், பெண் தியாக்கோன்கள் என்ற தலைப்புக்களில் திருத்தந்தையிடம், பல்வேறு தருணங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் விளக்கங்கள், மற்றும், திருப்பீடத்தின் உயர் பொறுப்புக்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களுக்கு வழங்கியுள்ள நியமனங்கள், ஆகியவை குறித்து Fabrizio அவர்கள் தன் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

திருஅவையில் பெண்களுக்கு வழங்கப்படக்கூடிய பொறுப்புக்கள், மனித வர்த்தகத்தில் பெண்கள் அடையும் துயரங்கள் ஆகியவை குறித்து பெண் செய்தியாளர்கள் திருத்தந்தையிடம் பல்வேறு பயணங்களில் எழுப்பியுள்ள கேள்விகளும், அவற்றிற்கு திருத்தந்தை வழங்கிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அமேசான் நிலப்பகுதியை மையப்படுத்தி, கடந்த ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்களின் சிறப்பு மாமன்றத்திலும், அதன் விளைவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள "Querida Amazonia" திருத்தூது அறிவுரை மடலிலும் பெண்களைக் குறித்து கூறப்பட்டுள்ள எண்ணங்களும் இந்நூலில் காணப்படுகின்றன.

26 February 2020, 15:06