தேடுதல்

Vatican News
கர்தினால் Donatis, திருத்தந்தையின் உரையை அருள்பணியாளர்களுக்கு வாசிக்கிறார் கர்தினால் Donatis, திருத்தந்தையின் உரையை அருள்பணியாளர்களுக்கு வாசிக்கிறார்  (Vatican Media)

அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் தவக்கால உரை

அருள்பணியாளர்களின் உள்ளங்களில் எழும் கசப்புணர்வுக்கு, அவர்களது நம்பிக்கை வாழ்வில் எழும் பிரச்சனைகள், ஆயர்களுடன் எழும் பிரச்சனைகள், ஒருவர், ஒருவருடன் எழும் பிரச்சனைகள் ஆகியவை மூன்று காரணங்கள் – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அருள்பணியாளர்களின் உள்ளங்களில் ஓர் ஒட்டுண்ணியாகவோ, புல்லுருவியாகவோ இருந்து, அவர்கள் அழைத்தலில் இருக்கவேண்டிய மகிழ்வை உறிஞ்சிவிடும் கசப்புணர்வைக் குறித்து தான் பேச விழைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்களுக்காக தயார் செய்திருந்த ஓர் உரையில் கூறியுள்ளார்.

உரோம் நகரில் பணியாற்றும் அருள்பணியாளர்களை, பிப்ரவரி 27, இவ்வியாழனன்று,  இலாத்தரன் புனித யோவான் பெருங்கோவிலில் சந்திக்கும் நிகழ்வு திருத்தந்தையின் காலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தது.

அருள்பணியாளர்களுக்கு தவக்கால உரை

ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல் நிலையில் சிறிது தளர்ந்திருந்ததால், அவருக்குப் பதிலாக, திருத்தந்தையின் சார்பில் உரோம் நகரின் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Angelo De Donatis அவர்கள், திருத்தந்தையின் உரையை அருள்பணியாளர்களுக்கு வாசித்தளித்தார்.

கசப்புணர்வுக்கு மூன்று காரணங்கள்

ஒவ்வோர் அருள்பணியாளரின் உள்ளத்திலும் எழும் கசப்புணர்வைக் குறித்து தான் பேச விழைவதாகக் தன் தவக்கால உரையை ஆரம்பித்துள்ள திருத்தந்தை, ஒவ்வொருவர் உள்ளத்திலும் உருவாகும் கசப்பிற்கு மூன்று காரணங்கள் உண்டு என, தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணியாளர்களின் உள்ளங்களில் எழும் கசப்புணர்வுக்கு, அவர்களது நம்பிக்கை வாழ்வில் எழும் பிரச்சனைகள் முதல் காரணம் என்றும், அதற்கு அடுத்ததாக, ஆயர்களுடன் எழும் பிரச்சனைகளும், ஒருவர், ஒருவருடன் எழும் பிரச்சனைகளும் இரண்டாவது மற்றும் மூன்றாவது காரணங்கள் என்றும், தன் உரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

நம்பிக்கை வாழ்வு பிரச்சனைகளால் எழும் கசப்பு

எம்மாவுஸ் சென்ற சீடர்கள் (காண்க. லூக். 24:21), இயேசுவைக் குறித்து தாங்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பையும், அது நிறைவேறாததால் அடைந்த ஏமாற்றத்தையும் பற்றி பேசியதை ஓர் எடுத்துக்காட்டாகக் காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எதிர்பார்ப்புக்கும், நம்பிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கிக் கூறி, ஆண்டவர் மீது நம்பிக்கை வளர்வதற்கு, செபம் ஒரு முக்கிய கருவியாக அமைகிறது என்று இவ்வுரையில் குறிப்பிட்டுள்ளார்.

நமக்கு என்ன கிடைக்கும் என்பதே, எதிர்பார்ப்பு என்ற உணர்வுக்கு அடித்தளமாக அமைகிறது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நம்பிக்கை உணர்வோ, நம்மை மையப்படுத்தாமல், நமக்கு என்ன கிடைக்கும் என்பதைப்பற்றி கவலை கொள்ளாமல், இறைவனில் முழு நம்பிக்கை கொள்வதாகும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகும் கசப்புணர்வை, நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை மணியாகக் கருதி, இறைவனில் முழு நம்பிக்கையையும், மகிழ்வையும் காண்பதற்கு உதவும் உந்துசக்தியாக அவ்வுணர்வை நாம் பயன்படுத்தமுடியும் என்று உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

ஆயர்களுடன் எழும் பிரச்சனைகள்

அருள்பணியாளர்கள் அடையும் கசப்புணர்வுக்கு இரண்டாவது காரணம், ஆயர்களுடன் எழும் பிரச்சனைகள் என்பதை, தன் உரையில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகாரத்திலும், பொறுப்பிலும் இருப்பவர்கள், தவறுகள் செய்யக்கூடியவர்கள் என்பதை நாம் திருஅவையிலும், இவ்வுலகிலும் கண்டுவருகிறோம் என்ற எண்ணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

கிறிஸ்துவே நமக்கு எல்லாமுமாகிறார் என்பதை முழுமையாக உணர்ந்து ஏற்றுக்கொள்ள இயலாதபோது, நாமே அனைத்தும் என்ற எண்ணத்துடன், நம்மை பிறர் மீது சுமத்தும் சோதனைகள் தோன்றும் என்றும், இதனால், பொறுப்பில் இருப்பவர்களுக்கும், அவர்களுக்குக் கீழ் பணியாற்றுவோருக்கும் இடையே உரசல்கள் எழும் என்றும் திருத்தந்தை தன் உரையில் தெளிவுபடுத்தினார்.

அருள்பணியாளர்களுக்குள் எழும் பிரச்சனைகள்

அண்மைய ஆண்டுகளில், பொருளாதார சிக்கல்கள், பாலியல் கொடுமைகள் போன்ற காரணங்களுக்காக, அருள்பணியாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருப்பதை, திருத்தந்தை, இவ்வுரையில் வெளிப்படையாகக் கூறி, இதனால், அருள்பணியாளர்கள், ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் சந்தேகங்கள், அவர்கள் நடுவே கசப்புணர்வை வளர்த்துள்ளன என்பதை வலியுறுத்தியுள்ளார்.

கசப்புணர்வின் இந்த மூன்றாவது காரணத்தைக் குறித்து அதிக எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களைக் குறித்து எழும் குற்றச்சாட்டுகளால், ஒருவர் தன்னையே சமுதாயத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்திக் கொள்வது, ஒருபோதும் தீர்வாகாது என்பதையும் கூறியுள்ளார்.

அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் எச்சரிக்கை

தன்னையே தனிமைப்படுத்திக்கொள்ளும் அருள்பணியாளர்கள், விரைவில், தங்கள் தனிமையைப் போக்க, இவ்வுலகம் சொல்லித்தரும் வழிகளில் செல்ல முயல்கின்றனர் என்பதையும், திருத்தந்தை ஓர் எச்சரிக்கையாக விடுத்துள்ளார்.

மற்றவர்களோடு நம் நேரத்தையும், எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள விழையாமல் வாழ்வது, சாத்தானுக்கு மிகவும் பிடித்த ஒரு நிலை என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் மீதும், இறை மக்கள் மீதும் முழு நம்பிக்கை கொண்டு உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதே நம் கசப்புணர்வை வெல்லும் சிறந்த வழி என்பதை உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு உணர்த்தியுள்ளார்

27 February 2020, 15:07