தேடுதல்

Vatican News
இத்தாலியின் பாரியில் கிறிஸ்தவத் தலைவர்களுடன் திருத்தந்தை (07 ஜூலை 2018) இத்தாலியின் பாரியில் கிறிஸ்தவத் தலைவர்களுடன் திருத்தந்தை (07 ஜூலை 2018)  (ANSA)

சனவரி, பிப்ரவரி மாதங்களில் திருவழிபாடுகள்

பிப்ரவரி 23, ஞாயிறு காலை 10.45 மணிக்கு, இத்தாலியின் பாரி நகரில், “மத்திய கிழக்கில் அமைதிக்காக” திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

சனவரி 7, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, #HomilySantaMarta என்ற ஹாஸ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இன்று பலர், தங்கள் இதயத்தில் நடப்பது என்னவென அறியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், ஆண்டவரில் நிலைத்திருக்கவும், உலகின் போக்கிலிருந்து கடவுளின் ஆவியைப் பிரித்துப் பார்க்கவும் வரம் வேண்டுவோம், இதனால் நம் இதயம், கடவுளுக்கும் நமக்கும் இடையே சந்திக்கும் இடமாக அமையும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

சனவரி மாத திருவழிபாடுகள்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு சனவரி, பிப்ரவரி மாதங்களில் நிறைவேற்றும் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு Guido Marini அவர்கள், சனவரி 07, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார்.

புனித பவுல் மனம் மாறிய விழாவான சனவரி 25, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பெருங்கோவிலில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருப்புகழ்மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை. 

சனவரி 26, ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், ஆண்டின் 3வது ஞாயிறாகிய, இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுவார், திருத்தந்தை.

பிப்ரவரி மாத திருவழிபாடுகள்

ஆண்டவர் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவன்று சிறப்பிக்கப்படும், 24ம் துறவியர் உலக நாளுக்கென, பிப்ரவரி 1, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், துறவியருக்கு திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை. 

பிப்ரவரி 23, ஞாயிறு காலை 10.45 மணிக்கு, தென் இத்தாலியின் பாரி நகரில், மத்திய கிழக்கில் அமைதிக்காக திருப்பலி நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ். அச்சமயத்தில், பாரி நகரில், “மத்திய கிழக்கு: அமைதியின் எல்லை” என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறும். 2018ம் ஆண்டில், பாரியில், மத்திய கிழக்கு முதுபெரும் தந்தையருடன் திருத்தந்தை அமைதிக்காக குரல் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

07 January 2020, 14:55