தேடுதல்

Vatican News
உலக பொருளாதார அமைப்பின் 50வது மாநாடு உலக பொருளாதார அமைப்பின் 50வது மாநாடு  (REUTERS)

அரசுகளின் கொள்கைகளில் மனிதருக்கு முக்கியத்துவம்

வருங்காலத் தலைமுறைகள் உள்ளிட்ட, நம் அனைத்து சகோதர சகோதரிகளின் ஒருங்கிணைந்த முன்னேற்ற நடவடிக்கைகளைத் தேடுவதற்கு, அறநெறிசார்ந்த பொறுப்புணர்வு அதிகமாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அதிகாரம் மற்றும், ஆதாயங்களுக்கும் மேலாக, மனிதரின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது, அரசுகள் மற்றும், தொழில் அதிபர்களின் கடமை என்று, 50வது உலக பொருளாதார மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில், சனவரி 21 இச்செவ்வாயன்று துவங்கியுள்ள    உலக பொருளாதார அமைப்பின் (WEF) 50வது மாநாட்டிற்குச் செய்தி அனுப்பியுள்ள  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து பொதுவான கொள்கைகளிலும் மனிதர் மையப்படுத்தப்பட வேண்டும் என்று, உலகத் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.

நாம் அனைவரும் ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற எண்ணத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது என்றும், தனியுரிமை கோட்பாட்டைக் களைய வேண்டும் மற்றும், ஒருவர் ஒருவரைப் பராமரிப்பதற்கு தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வழியாக இச்செய்தியை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கடந்த ஐம்பது ஆண்டுகளில், பன்னாட்டு அரசியல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன, இவற்றில் பல, மனித சமுதாயத்திற்கு உதவியுள்ளன, அதேநேரம், இவற்றில் மற்றவை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்று கூறியுள்ளார்.

இம்மாநாட்டில் இப்போது மற்றும், வருங்காலத்தில் நடைபெறவுள்ள மாநாடுகளில் கலந்துகொள்பவர்கள் அனைவரும், வருங்காலத் தலைமுறைகள் உள்ளிட்ட, நம் அனைத்து சகோதர சகோதரிகளின் ஒருங்கிணைந்த முன்னேற்ற நடவடிக்கைகளைத் தேடுவதற்கு, அறநெறிசார்ந்த மிகுந்த பொறுப்புணர்வு உள்ளது என்பதை மனதில் இருத்த வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்பவர்களின் தீர்மானங்கள், அனைவரின், குறிப்பாக, சமுதாய மற்றும், பொருளாதார அநீதிகளை அனுபவிக்கின்ற மற்றும், தங்களின் வாழ்வே அச்சுறுத்தப்படும் நிலையிலுள்ள, அதிகம் தேவையில் இருக்கும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வில் வளர்வதற்கு இட்டுச்செல்ல வேண்டும் என்ற தன் ஆவலையும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சனவரி 24, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில், அரசியல், வணிகம், கல்வி மற்றும், பன்னாட்டு அமைப்புகளில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும், சக்திவாய்ந்த தலைவர்கள் உட்பட 3,000 பேர் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில், சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படுகின்றது.

21 January 2020, 15:15