தேடுதல்

Vatican News
பல்கேரியாவில் திருக்காட்சி விழா பல்கேரியாவில் திருக்காட்சி விழா  (AFP or licensors)

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து

மறைப்பணித் தளங்களில் வாழும் சிறுவர் சிறுமிகளுக்கு, தங்கள் செபம் மற்றும் பகிர்வு நடவடிக்கைகள் வழியாக ஏனைய சிறுவர் சிறுமிகள் உதவும் திருநாள், உலக பாலக மறைப்பணியாளர் நாள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

சனவரி 7, இச்செவ்வாய்க்கிழமையன்று கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க, மற்றும், ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கு தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 6, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை இவ்வாழ்த்துக்களை வெளியிட்டார்.

இத்திருஅவைகளும், அவற்றின் அங்கத்தினர்களும், கிறிஸ்துவின் ஒளியையும், அமைதியையும் பெறவேண்டுமென ஆவல்கொள்வோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் பெருவிழாவைக் கொண்டாடவிருக்கும் இந்த கிறிஸ்தவ சகோதர்களுக்கு கரவொலி எழுப்பி வாழ்த்தை தெரிவிப்போம் என்று வளாகத்தில் கூடியிருந்தோரிடம் கூறினார்.

திருக்காட்சித் திருவிழா அன்று, உலக பாலக மறைப்பணியாளர் நாள் சிறப்பிக்கப்படுவதையும் நினைவூட்டிய திருத்தந்தை, மறைப்பணித் தளங்களில் வாழும் சிறுவர் சிறுமிகளுக்கு, தங்கள் செபம் மற்றும் பகிர்வு நடவடிக்கைகள் வழியாக ஏனைய சிறுவர் சிறுமிகள் உதவும் திருநாள் இது என்றார்.

அனைத்துத் திருப்பயணிகளுக்கும், குறிப்பாக, தென்கொரியா, அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் கல்லூரி, இத்தாலியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்கும், இந்நாளில் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தை வந்தடைந்த மூன்று ஞானிகள் ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களுக்கும், போலந்தின் பல்வேறு நாடுகளில் இத்தகைய ஊர்வலங்களை சிறப்பித்தவர்களுக்கும் தன் தனிப்பட்ட வாழ்த்துக்களை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

06 January 2020, 15:31